dear prime minister trends in twitter

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில், இன்னும் இரு தினங்களில் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ளது. அதனையொட்டி தங்களுடைய வேட்பாளர்களை ஆதரித்து கட்சித் தலைவர்களும், சிறப்புப் பேச்சாளர்களும் தொடர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தேசிய கட்சிகளின் தலைவர்களும் தமிழகம் வந்து தங்கள் கட்சி வேட்பாளர்களையும், தங்களது கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

அந்தவகையில் சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று தமிழகம் வந்தார் பிரதமர் மோடி. மதுரை மாவட்டம், பாண்டிகோவில் ரிங்ரோடு அம்மா திடலில் இன்று காலை நடந்த பிரச்சாரத்தில், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

Advertisment

கடந்த சில தினங்களாக பாஜக தேசியத் தலைவர்கள் தமிழகத்தில் முகாமிட்டுள்ள நிலையில், அவர்களின் இந்த வருகை எங்கள் கட்சிக்கே சாதகமாக அமையும் என திமுகவினர் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில், பிரதமர் தங்கள் தொகுதிக்கு வந்து அதிமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் எனவும், அப்படிச் செய்தால் தங்களது வெற்றிவாய்ப்பு பிரகாசமாகும் எனவும் ட்விட்டர் வாயிலாகப் பிரதமருக்குக் கோரிக்கை வைத்து வருகின்றனர் திமுக வேட்பாளர்கள். "Dear Prime Minister" என்ற சொற்றொடரைப் பயன்படுத்தி இந்த கோரிக்கையை திமுக வேட்பாளர்கள் முன்வைத்து வருகின்றனர். இதன் காரணமாக இந்த வாக்கியம் ட்விட்டரில் இந்திய அளவில் இன்று ட்ரெண்டிங்கிலும் இடம்பிடித்தது. பாஜக தேசியத் தலைவர்களின் தொடர் பிரச்சாரங்களால் ஆட்சியைப் பிடித்துவிடுவோம் என அதிமுக மற்றும் பாஜக நம்பிக்கை கொண்டிருக்கையில், திமுகவும் அதே நம்பிக்கையோடு பிரதமருக்கு இப்படி ஒரு கோரிக்கையை முன்வைக்கத் துவங்கியுள்ளது.