ADVERTISEMENT

எடப்பாடி பழனிசாமிக்கு இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது!

10:16 PM Apr 09, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT


சேலம் அரசு மருத்துவமனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை மாலை இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

ADVERTISEMENT

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக தினமும் சராசரியாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தேர்தல் பரப்புரையின்போது அரசியல் கட்சியினர், தொண்டர்கள், பொதுமக்கள் பலரும் முகக்கவசம் அணியாமல் கூட்டங்களில் கலந்து கொண்டனர். இதனால் கரோனா தொற்றின் வேகம் அதிகரித்துள்ளது.

இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளுடன் சனிக்கிழமை (ஏப். 10) முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது. முகக்கவசம் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப். 6- ஆம் தேதி நடந்தது. அதையடுத்து, ஏப். 7- ஆம் தேதி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. வேட்பாளர்கள், முக்கிய நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார். அப்போது, தேர்தல் நேரத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி கூறினார்.

அன்று மாலை சுகாதாரத்துறை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், உதயகுமார், வீரமணி ஆகியோரும் முதல்வரைச் சந்தித்தனர். இதையடுத்து கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கினார். இதற்கிடையே, சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை (ஏப். 9) மாலையில் இரண்டாவது தவணையாக கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அப்போது அவர், தான் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாக விழிப்புணர்வு பதாகையையும் ஒரு கையில் பிடித்திருந்தார். அதையடுத்து அவர், பொதுமக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT