ADVERTISEMENT

சர்ச்சைக்குள்ளான நடிகர் பிரித்விராஜ் ட்வீட்... போராட்டத்தில் இறங்கிய அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள்!

01:04 PM Oct 26, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தென்மேற்கு பருவமழை தொடங்கியிருப்பதால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதன் மூலம் அணையின் நீர் மட்டமும் 140 அடியை நெருங்கிக்கொண்டு வருகிறது. அதைக் கண்ட கேரளா முதல்வர் பினராயி விஜயன், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு, அணையின் நீர் உயர்ந்துவருவதால் அதிகபட்சமாக தமிழ்நாட்டிற்கு தண்ணீரைத் திறந்துவிடுங்கள் என்று கடிதமும் எழுதியிருக்கிறார். இந்தநிலையில்தான் கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகரான பிருத்விராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவிட்டிருக்கிறார்.

அதாவது 125 ஆண்டுகளுக்கு மேலான பழமையான முல்லைப் பெரியாறு அணை இருந்துவருவதால் அதை உடைக்க வேண்டுமே தவிர, ஆய்வு பற்றி எல்லாம் தெரிந்துகொள்ள விரும்பவில்லை என்றொரு கருத்தைப் பதிவிட்டிருக்கிறார். அதைக் கண்ட கேரளாவின் முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன்லால், துல்கர் ஜெயராம், திலீப் உள்ளிட்ட நடிகர்களின் ரசிகர் மன்றங்கள் சார்பாகவும் நடிகர் பிரித்விராஜ்க்கு ஆதரவாக முல்லை பெரியார் அணையை இடிக்க வேண்டும் என்று ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் பதிவுசெய்தனர். அதுபோல் தமிழ் நடிகரான விஜய் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த கேரளா ரசிகர்களும் முல்லை பெரியாரை இடிக்க வேண்டும் என்று பதிவிட்டு வருகிறார்கள்.

இது இந்திய அளவில் வைரலாக பரவி முல்லைப் பெரியாறுக்கு எதிராகவும் ஆதரவாகவும் கருத்துகள் பரவிவருகின்றன. அதேபோல், கேரளாவில் உள்ள பல மாவட்டங்களிலும் முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்ற பேச்சு மலையாளிகள் மத்தியில் பரவலாகவே இருந்துவருகிறது. கேரள முன்னணி நடிகரான பிரித்விராஜின் இந்தச் செயலால் கேரளாவிலுள்ள பிரபல நடிகர்களின் ரசிகர்கள் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக குரல் கொடுத்துவருவதைக் கண்டு தேனி மாவட்ட மக்கள் உட்பட தமிழ்நாடு விவசாயிகள், பொதுமக்கள், அரசியல்வாதிகள், பல்வேறு அமைப்புகள் என பலரும் அதிர்ச்சியடைந்து வருகிறார்கள்.

இந்த நிலையில்தான் அகில இந்திய ஃபார்வர்ட் கட்சியின் தேனி மாவட்ட பொதுச்செயலாளர் சக்கரவர்த்தி தலைமையில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், முல்லை பெரியாறு அணைக்கு எதிராக கருத்து தெரிவித்த நடிகர் பிரித்விராஜ் உருவ பொம்மையை எரித்து கண்டன குரல் எழுப்பினர். அது மட்டுமல்லாமல் முல்லை பெரியாறு அணையில் 152 அடி தண்ணீரை நிறுத்துவோம் என்று வலியுறுத்தி கோஷம் போட்டனர். அதன் பின்னர் மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் முல்லை பெரியாறு அணைக்கு எதிராக சர்ச்சை கருத்துகளை வெளியிட்ட நடிகர் பிருத்விராஜை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் அதோடு அணைக்குத் தமிழ்நாடு போலீஸ் அல்லது மத்திய போலீசை பாதுகாப்பு பணியில் போட வேண்டும் என்று கோரி மனு கொடுத்திருக்கிறார்கள்.

அதேபோல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேனி மாவட்ட நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன் தலைமையில் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். மேலும், கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகளும் போராட்டத்தில் குதிக்கவும் தயாராகிவருகிறார்கள். கேரளாவிலுள்ள விஜய் ரசிகர் மன்றத்தினர் முல்லை பெரியாறு அணைக்கு எதிராக குரல் கொடுத்ததைக் கண்டு தேனி மாவட்ட விஜய் ரசிகர்கள் முல்லை பெரியாறு அணைக்கு ஆதரவாக தங்களது கருத்துகளை ட்விட்டரில் பதிவுசெய்து, ‘முல்லை பெரியாறு அணையை தொடர்ந்து பாதுகாப்போமே தவிர அணையை இடிக்க அனுமதிக்க மாட்டோம்’ என்று பதிலடி கொடுத்துவருகிறார்கள். அதோடு கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு முல்லைப் பெரியாறுக்கு ஆதரவாக தேனி மாவட்டம் உட்பட தென்மாவட்ட மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT