
தென்தமிழ்நாட்டில் உள்ள தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களின் நீர் ஆதாரமான முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் நான்காவது முறையாக 142 அடியாக இன்று (30ஆம் தேதி) அதிகாலை 03.55 மணிக்கு உயர்ந்துள்ளது.
இது தென்மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘ரூல் கர்வ்’ முறைப்படி நவம்பர் 30ஆம் தேதி அணை நீர்மட்டம் 142 அடியாக உயர்த்த தமிழ்நாடு பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏற்கனவே திட்டமிட்டிருந்தனர். அதையடுத்து, அணைக்கு இறுதி அபாய வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டு, சைரன் ஒலிக்கப்பட்டு, 142 அடிக்கு மேல் வரும் தண்ணீர் கேரளாவிற்குள் திறந்துவிடப்பட்டுவருகிறது. திறக்கப்படும் நீர் வண்டிப்பெரியாறு வழியாக இடுக்கி அணைக்குச் சென்றுவருகிறது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அணை நீர்மட்டம் ஏற்கனவே கடந்த 2014, 2015, 2018 என மூன்றுமுறை 142 அடியாக உயர்த்தப்பட்டது. தற்போது நான்காம் முறையாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதைக் கண்டு தென்தமிழ்நாட்டில் உள்ள ஐந்து மாவட்ட விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.