ADVERTISEMENT

'தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'-சேகர்பாபு பேட்டி

06:32 PM Jun 25, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிதம்பரம் நடராஜர் கோவிலில் புகழ்பெற்ற ஆனித் திருமஞ்சன திருவிழா சில தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் முக்கிய நிகழ்வாக நாளை காலை தேரோட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து ஆனித் திருமஞ்சன திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழா நாட்களில் நடராஜர் கோவிலில் மூலவராக இருக்கின்ற நடராஜனே தேருக்கு வந்து விழாவில் கலந்து கொள்வது வழக்கம்.

இந்நிலையில் நடராஜர் கோயிலில் உள்ள கனகசபையின் மீது ஏறி சாமி தரிசனம் செய்ய யாருக்கும் நான்கு நாட்களுக்கு அனுமதி இல்லை எனத் தீட்சிதர்கள் திடீரென அறிவிப்புப் பலகை ஒன்றை வைத்தனர். பக்தர்கள் சிலர் இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில் அறிவிப்பு பதாகையை அகற்ற வலியுறுத்தி அறநிலையத்துறை அதிகாரி சரண்யா சென்றபோது தீட்சிதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிதம்பரம் கோவிலில் நிர்வாக அதிகாரிகளிடம் தீட்சிதர்கள் தகராறு செய்துள்ளனர். அறநிலையத் துறையை கலந்து ஆலோசிக்காமல் அறிவிப்பு வெளியிடுவது ஏற்புடையது அல்ல. சிதம்பரம் கோவிலில் கனகசபையின் மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு உள்ளது. கனகசபையின் மீது ஏறி தரிசனம் செய்ய அறநிலையத்துறையும் ஆணை பிறப்பித்துள்ளது. ஆகம விதிப்படி எவையெல்லாம் செய்யக்கூடாதோ அவற்றை தீட்சிதர்கள் செய்து வருகின்றனர். அதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்ட விவகாரத்தில் விசாரணை நடத்தி தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கோவில்களில் இந்துக்களின் மத வழிபாட்டு முறையை ஏற்றுக் கொண்டு வழிபட வரும் பிற மதத்தினரையும் அனுமதிக்கலாம். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான பூர்வாங்க பணிகள் விரைவில் தொடங்கும். அதேபோல் திருப்பரங்குன்றம் கோவிலில் ரோப் கார் வசதி தொடங்க சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகிறது. அதற்கான பணிகளும் விரைவில் தொடங்கும்'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT