Skip to main content

“தமிழ்நாடு அரசு அறிவித்த பயணம் யாருக்கும் போட்டியல்ல...” - அமைச்சர் சேகர்பாபு

Published on 28/02/2023 | Edited on 28/02/2023

 

"The trip announced by the Tamil Nadu government is not a match for anyone" Minister Shekharbabu

 

தமிழக அரசு அறிவித்த காசி யாத்திரை காசி தமிழ் சங்கத்திற்கு போட்டியல்ல என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

 

தமிழக அரசு சார்பில் கடந்த 22 ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து காசிக்கு முதற்கட்டமாக 66 பேர் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் தங்களது பயணத்தை முடித்துக் கொண்டு சென்னையில் உள்ள எழும்பூர் ரயில் நிலையம் வந்தபோது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களை வரவேற்றார். 

 

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தல்படி, கடந்த ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கையில் 165 அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில் 27வது அறிவிப்பாக ராமேஸ்வரத்திலிருந்து காசிக்கு செல்கின்ற புனித யாத்திரை பயணத்தை அறிவித்திருந்தோம். கடந்த 22 ஆம் தேதி 66 நபர்களுடன் இந்த யாத்திரை தொடங்கப்பட்டது. பயணம் முடிந்து சென்னை திரும்பியவர்களை நானும் துறையின் ஆணையரும் வரவேற்று வழியனுப்பி வைத்தோம். இந்த பயணத்திற்காக செலவான 50 லட்சத்தை தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் அரசு மானியமாக வழங்கப்பட்டுள்ளது. 

 

2022 - 2023 ஆம் ஆண்டுக்கான 200 நபர்களுக்கு காசி புனித யாத்திரை பயண திட்டத்தை அறிவித்திருந்தோம். முதற்கட்டமாக 66 பேர் சென்று வந்துள்ளனர். இரண்டாவது கட்டமாக அடுத்த மாதம் ஒன்றாம் தேதியும் அதேபோல் மார்ச் 8 ஆம் தேதியும் இந்த பயண திட்டம் மீண்டும் தொடங்க உள்ளது. மூன்று பிரிவுகளாக பிரித்து காசிக்கு அழைத்து செல்கிறோம். உடன் மருத்துவ குழுவினரையும் அனுப்புகிறோம். 

 

60 வயதிற்கு மேற்பட்டோருக்கான இந்த முதற்கட்ட பயணத்தில் 18 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்கள். காசி தமிழ் சங்கத்திற்கு போட்டியாக இப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனச் சொல்கிறார்கள். இப்பயணம் யாருக்கும் இது போட்டி அல்ல. இதைப் பொறுத்தளவில் கடந்தாண்டு மானிய கோரிக்கையிலேயே நாங்கள் அறிவித்துவிட்டோம். அதன்பிறகுதான் இந்த காசி சங்கமம் எல்லாம் உருவானது. ஆகவே, போட்டி என்று எடுத்துக் கொண்டால் தமிழக அரசு அறிவித்த திட்டத்திற்கு தான் காசி தமிழ் சங்கம் போட்டி என்பதாக எடுத்துக் கொள்ளலாம்.” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.