ADVERTISEMENT

பிரபல ரவுடி 5வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது

10:07 AM Apr 11, 2019 | elayaraja

சேலத்தில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த பிரபல ரவுடி, ஐந்தாவது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ADVERTISEMENT


சேலம் செவ்வாய்பேட்டையில் வெள்ளி வியாபாரம் செய்துவந்த வியாபாரி ஒருவர், கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி 229 கிலோ வெள்ளி நகைகளுடன் காரில் மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

ADVERTISEMENT


கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூர் அருகே காரை வழிமறித்த மர்ம கும்பல், அவரிடம் இருந்த வெள்ளி நகைகளை கொள்ளை அடித்துக்கொண்டு தப்பி ஓடியது. இதுகுறித்து ஹிரியூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.


விசாரணையில், சேலம் மாவட்டம் தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஜனார்த்தனன் மகன் முரளி என்கிற முரளிதரன் (37) மற்றும் அவருடைய கூட்டாளிகள்தான் வெள்ளி நகைகளை கொள்ளை அடித்திருப்பது தெரியவந்தது.



இதையடுத்து முரளியை காவல்துறையினர் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், 20.11.2017ம் தேதி, சேலம் கொண்டலாம்பட்டி பட்டர்பிளை பாலம் அருகே ஒரு கும்பல் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது. சிறைக்குள் இருந்தபடியே முரளி போட்டுக்கொடுத்த திட்டத்தின்பேரில் அவருடைய கூட்டாளிகள் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து அன்னதானப்பட்டி காவல்துறையினர் முரளி மீது ஒரு வழக்கை பதிவு செய்தனர்.



இந்நிலையில் முரளி, பிணையில் வெளியே வந்தார். கடந்த 16.2.2019ம் தேதி, அல்லிக்குட்டை காலனி சுடுகாடு அருகே நடந்து வந்த ஒரு மூதாட்டியிடம் கத்தி முனையில் 3 பவுன் நகை பறிப்பிலும் ஈடுபட்டார்.


மேலும் முரளி மீது கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல், வழிப்பறி என பல்வேறு வழக்குகள் உள்ளதோடு, பிணையில் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.


இதற்கிடையே, வழிப்பறி வழக்கில் அவரை கைது செய்த காவல்துறையினர் கோவை சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அன்னதானப்பட்டி காவல் ஆய்வாளர், மாநகர காவல்துறை துணை ஆணையர் ஆகியோர் பரிந்துரை செய்தனர்.


அதன்பேரில், மாநகர காவல்துறை ஆணையர் சங்கர், ரவுடி முரளியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதற்கான ஆணையை, கோவை சிறையில் உள்ள முரளியிடம் காவல்துறையினர் புதன்கிழமை (ஏப்ரல் 10) சார்வு செய்தனர். இத்துடன் முரளி, ஐந்தாவது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT