ADVERTISEMENT

சேலம் அருகே கோர விபத்து; நேபாள சுற்றுலா பயணிகள் 6 பேர் பரிதாப பலி! 26 பேர் பலத்த காயம்!!

11:45 PM Feb 20, 2020 | kalaimohan

சேலம் அருகே, இந்தியாவிற்கு சுற்றுலா வந்திருந்த நேபாள நாட்டினர் சென்ற மினி பேருந்து மீது தனியார் சொகுசுப்பேருந்து மோதிய விபத்தில் நேபாள நாட்டினர் 6 பேர் பரிதாபமாக பலியாயினர். 26 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நேபாள நாட்டின் தலைநகரான காத்மாண்டுவைச் சேர்ந்த 32 பேர் இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களை சுற்றிப்பார்ப்பதற்காக கடந்த பத்து நாள்களுக்கு முன்பு இந்தியா வந்திருந்தனர். இந்தியாவில் முக்கிய கோயில்கள், சுற்றுலாத்தலங்ளை பார்க்க வசதியாக மினி பேருந்தை ஏற்பாடு செய்து, அதில் சுற்றுலா சென்று வந்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

காத்மாண்டுவைச் சேர்ந்த கவுல்ராம் சவுதாரி, பேருந்தை ஓட்டி வந்தனர். அவருக்கு உதவி ஓட்டுநராக இட்டோடி கத்தாரி என்பவர் செயல்பட்டார். ஒருவர் சோர்வு அடையும்போது மற்றொருவர் வாகனத்தை ஓட்டி வந்துள்ளனர். இந்நிலையில், புதன்கிழமை (பிப். 19) கன்னியாகுமரிக்குச் சென்றுவிட்டு, அங்கிருந்து ராஜஸ்தான் செல்வதற்காக சேலம் - பெங்களூரு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள நரிப்பள்ளம் என்ற இடம் வந்தபோது, அப்பகுதியில் உள்ள காளியம்மன் கோயிலுக்குச் சொந்தமான தங்கு மண்டபத்தை பார்த்தனர். அப்போது நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் ஆகிவிட்டதால், அந்த மண்டபத்தில் இரவு தங்கி விட்டு அதிகாலையில் பயணத்தைத் தொடரலாம் என முடிவு செய்திருந்தனர்.

இதையடுத்து, அந்த பேருந்தை மண்டபத்தை நோக்கி செல்வதற்காக சாலையின் இடதுபுறத்தில் இருந்து வலதுபக்கத்திற்கு ஓட்டுநர் கவுல்ராம் சவுதாரி திருப்பினார். அப்போது பெங்களூருவில் இருந்து கேரளா சென்று கொண்டிருந்த சொகுசுப் பேருந்து (ஆம்னி) ஒன்று, நேபாள நாட்டினர் சென்ற மினி பேருந்து மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில், நேபாள சுற்றுலா பயணிகள் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மற்றவர்கள் பலத்த காயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஓமலூர் காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்து சென்றனர். 108 ஆம்புலன்ஸ், தனியார் மருத்துவமனைகளின் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த நால்வரின் சடலங்களும் உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி மேலும் இரண்டு சுற்றுலா பயணிகள் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.


காவல்துறை விசாரணையில், உயிரிழந்தவர்கள், நேபாள நாட்டைச் சேர்ந்த பீர்பதூர் ராய், டீகாராம், கோபால் தமன், போதினி, புல்கரி சவுத்திரி, விஷ்ணு தங்கல் ஆகியோர் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும், காணி சவ்த்ரி (50), மவைதி (40), ரேணுகா கோபால் (70), பூசார் சவுத்ரி (55), பீம்லா சவுத்ரி (52) ஆகியோருக்கு கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இவர்கள் உள்பட பலத்த காயம் அடைந்த 26 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து இந்தியாவில் உள்ள நேபாள நாட்டு தூதரகம் மூலம் சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டு உள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT