ADVERTISEMENT

ரியல் எஸ்டேட் அதிபரிடம் 8 லட்சம் ரூபாய் சுருட்டல்; கருவூலக ஊழியர் பெயரில் பெண் உள்பட மூவர் மோசடி! 

11:23 AM Apr 09, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேலத்தில், பெங்களூருவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரிடம், கருவூலக ஊழியர் போர்வையில் பெண் உள்பட மூன்று பேர் முத்திரைத்தாள் கொடுப்பதாகக் கூறி 8 லட்சம் ரூபாயை சுருட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே உள்ள சித்தகூர் கேட் இரண்டாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (49). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். நிலம் கிரயம் செய்வதற்கு முத்திரைத்தாள் தேவை என்பதால், நாமக்கல்லைச் சேர்ந்த வேலு என்கிற குழந்தைவேலு என்ற முத்திரைத்தாள் முகவரிடம் கேட்டுள்ளார்.


இதையடுத்து குழந்தைவேலு, சேலம் மாவட்ட கருவூலத்துறையில் முத்திரைத்தாள் பிரிவில் தனக்குத் தெரிந்த தோழி ஒருவர் பணியாற்றி வருவதாகவும், அவர் தன்னுடைய நண்பர் மனோஜ்குமார் என்பவருடன் சேர்ந்து முத்திரைத்தாள் விற்பனை செய்து வருவதாகவும், அவர்களிடம் எத்தனை லட்சம் ரூபாய்க்கு வேண்டுமானாலும் முத்திரைத்தாள்கள் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும், மணிகண்டனை சேலத்திற்கு அழைத்து வந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைத்து கார்த்திகா, மனோஜ்குமார் ஆகியோரை குழந்தைவேலு அவருக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.

இதையடுத்து, கடந்த புதன்கிழமை (ஏப். 6) முத்திரைத்தாள்களை வாங்குவதற்காக மணிகண்டன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தனியார் கேன்டீன் பகுதியில் வந்து காத்திருந்தார். அங்கு வந்த கார்த்திகாவும், மனோஜ்குமாரும் 8 லட்சம் ரூபாயை கொடுத்துவிட்டு அதற்குரிய முத்திரைத்தாள்களை பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளனர்.


அதன்பேரில் மணிகண்டனும் அவர்களிடம் 8 லட்சம் ரூபாயைக் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட அவர்கள், அவரை அங்கேயே பத்து நிமிடம் காத்திருக்கும்படியும், முத்திரைத்தாள்களை எடுத்து வருவதாகவும் கூறிவிட்டுச் சென்றுள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர்கள் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த மணிகண்டன், கார்த்திகாவின் செல்போனுக்கு பலமுறை அழைத்தும், அவர் அழைப்பை எடுக்கவில்லை. ஒருகட்டத்தில், சொல்லி வைத்தாற்போல இருவரின் செல்போன் எண்களும் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.


இதையடுத்து அவர்கள் தன்னை ஏமாற்றி விட்டதாக உணர்ந்த மணிகண்டன், இதுகுறித்து சேலம் நகர குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், கார்த்திகா, மனோஜ்குமார் ஆகிய இருவரும் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முதல்கட்ட விசாரணையில் கார்த்திகா, மாவட்ட கருவூலத்தில் பணியாற்றவில்லை என்பதும், அவர் அங்கு வேலை செய்வதாக நாமக்கல் முகவர் குழந்தைவேலு, மணிகண்டனை நம்ப வைத்திருக்கிறார் என்பதும் தெரிய வந்துள்ளது.

தலைமறைவான கார்த்திகா, மனோஜ்குமார், குழந்தைவேலு ஆகிய மூன்று பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். அவர்களுடைய செல்போன் சிக்னலை வைத்து, இருப்பிடம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.


மோசடிக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையே களமாக ஒரு கும்பல் பயன்படுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT