ADVERTISEMENT

பராமரிப்பு பணியில் 6.50 லட்சம் மோசடி! - இருவர் மீது வழக்கு!

11:47 PM Apr 23, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேலத்தில் தெருவிளக்கு, குடிநீர் குழாய் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளில் போலி ஆவணம் தயாரித்து 6.50 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக செயல் அலுவலர் உள்ளிட்ட இருவர் மீது லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலராகப் பணியாற்றி வருபவர் கார்த்திகேயன் (52). இவர், பேரூராட்சி பராமரிப்புப் பணியில் முறைகேடு செய்துள்ளதாகப் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் பேரூராட்சி அலுவலகத்திற்குச் சென்று ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

ஆய்வில், குடிநீர் குழாய்களை சீரமைத்தல், கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டிகளை சுத்தம் செய்தல், தெருவிளக்கு பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கார்த்திகேயனின் உறவினர் ஒருவரின் வீட்டு முகவரியில் போலியாக ரசீது தயாரித்து மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. அதாவது, இல்லாத நிறுவனத்தின் பெயரில் பராமரிப்புப் பணிகளுக்கான பொருள்களை வாங்கியதாக ரசீதுகளை தயாரித்து 6.50 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மோசடிக்கு, எடப்பாடியைச் சேர்ந்த சதீஸ்குமார் (30) என்பவர் உடந்தையாக இருந்தார் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து கார்த்திகேயன் மற்றும் சதீஸ்குமார் ஆகிய இருவர் மீதும் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கூட்டு சதி, போலி ஆவணம் தயாரித்தல், மோசடி ஆவணங்களை உண்மையான ஆவணங்களாகப் பயன்படுத்துதல், நம்பிக்கை துரோகம், மோசடி, அரசுப்பணத்தை கையாடல் செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. விரைவில், கார்த்திகேயன் பணியிடைநீக்கம் செய்யப்படுவார் எனத் தெரிகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT