ADVERTISEMENT

எடப்பாடிக்கு நெருக்கமானவராக அறியப்பட்ட பதிவுத்துறை உதவியாளர் வீட்டில் 5 லட்சம் ரொக்கம், சொத்து ஆவணங்கள் சிக்கின

08:53 AM Oct 13, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT


சேலம் பத்திரப்பதிவுத்துறை ஊழியர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறப்பட்ட புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில், அவருடைய வீட்டில் இருந்து சொத்து ஆவணங்கள், 5 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

ADVERTISEMENT

சேலம் இரும்பாலை அருகே உள்ள கணபதிபாளையத்தைச் சேர்ந்தவர் காவேரி (வயது 58). இவர், சூரமங்கலத்தில் உள்ள மேற்கு சரக பத்திரப்பதிவு அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வருகிறார்.

வருமானத்தைவிட 200 சதவீதம் வரை கூடுதலாக சொத்து சேர்த்துள்ளதாக சேலம் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதன்பேரில், அக். 11- ஆம் தேதி காலை அவருடைய வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

காலை 08.00 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை 9 மணி நேரம் நடந்தது. இந்த சோதனையில் அவருடைய வீட்டில் இருந்து 20 சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அவருடைய மனைவி சாந்தி பெயரில் சொத்துகள் வாங்கப்பட்டதற்கான சில ஆவணங்களும் சிக்கின. மேலும், 5 லட்சம் ரூபாய் ரொக்கத்தையும் கைப்பற்றினர்.

காவேரியின் வங்கி கணக்குகள், அவருடைய குடும்பத்தினரின் வங்கி கணக்குகள் விவரங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். இளம்பிள்ளையில் உள்ள அவருடைய நெருங்கிய உறவினர்கள் இருவர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

சேலத்தில் பல இடங்களில் வீடுகள், நிலங்களை தனது பெயரிலும் குடும்பத்தினர், பினாமிகள் பெயரிலும் வாங்கி போட்டிருப்பதாகச் சொல்கின்றனர்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட விவிஐபிக்களுக்கு மிக நெருக்கமானவராக அறியப்பட்டவர்தான் இந்த காவேரி. மாஜி விவிஐபிக்களுக்கு சேலத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் சொத்துகளை காவேரிதான் முன்னின்று பதிவு செய்து கொடுத்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட அறிமுகத்தால் எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்குள் முன்அனுமதி பெறாமலேயே எப்போது வேண்டுமானாலும் சென்று வரக்கூடிய அதிகாரம் பெற்றிருந்தார். அதிகார மட்டத்தில் இருப்போருடன் வலம் வந்ததால், பத்திரப் பதிவுத்துறையில் பணியாற்றி வரும் உயர் அதிகாரிகளே கூட இவருடைய சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டிய நிலையில் இருந்தனர். இது ஒருபுறம் இருக்க, மாஜி விவிஐபிக்களுக்கு பினாமியாக இருந்தாரா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT