ADVERTISEMENT

ரயிலில் பிடிபட்ட 4 கிலோ தங்க நகைகள்; 11 லட்சம் ரூபாய் வணிக வரி, அபராதம் வசூல்! 

07:35 AM Feb 11, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கோவை- சென்னை இன்டர்சிட்டி ரயிலில் சட்ட விரோதமாக கடத்திச் செல்லப்பட்ட 3.90 கிலோ தங்க நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவற்றுக்கு வணிக வரி செலுத்தப்படவில்லை என்பது தெரிய வந்ததை அடுத்து, 10.71 லட்சம் வரி மற்றும் அபராதம் வசூலிக்கப்பட்டது.

சேலம் வழியாக செல்லும் ரயில்களில் தங்கம், வெள்ளி மற்றும் கஞ்சா, புகையிலை போன்ற தடை செய்யப்பட்ட லாகிரி வஸ்துகள் கடத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, ரயில்வே காவல்துறையுடன் ஆர்பிஎப் காவல்துறையினரும் இணைந்து கடந்த ஓரிரு மாதங்களாக சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில், கோவை - சென்னை இன்டர்சிட்டி ரயிலில் பிப். 9- ஆம் தேதி, ஈரோடு ஆர்பிஎப் காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். டி4 ரயில் பெட்டியில் நடத்திய சோதனையின்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு பயணி இருந்தார். அவர் கையில் வைத்திருந்த பையை வாங்கி ஆய்வு செய்தபோது, 3.90 கிலோ எடையுள்ள தங்க நகைகள் இருப்பது தெரிய வந்தது.

விசாரணையில் அந்த நபர், கோவை செல்வபுரம் தில்லைநகரைச் சேர்ந்த அழகிரி (வயது 46) என்பதும், நகைக்கடையில் வேலை செய்து வருவதும், திருப்பத்தூர், குடியாத்தம், வாணியம்பாடி பகுதிகளில் அந்த நகைக்கடையின் கிளைகளுக்கு நகைகளைக் கொண்டு செல்வதும் தெரிய வந்தது.

அவர் வைத்திருந்த நகைகளுக்கு வணிகவரி செலுத்தப்படவில்லை என்பது தெரிய வந்ததால், அந்த நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து அவரையும், பிடிபட்ட நகைகளையும் சேலம் வணிகவரித்துறை அலுவலர் பிரகாஷிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். அவர்கள் நகைகளை மதிப்பீடு செய்தனர். அதன்படி, அந்த பிடிபட்ட நகைகளுக்கு வணிகவரி மற்றும் அபராத வரி சேர்த்து மொத்தம் 10.71 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இதுகுறித்து கோவையில் உள்ள நகைக்கடை உரிமையாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கடை உரிமையாளர்கள் நகைகளுக்கான வணிகவரி மற்றும் அபராத வரித் தொகையை முழுமையாகச் செலுத்தினர். இதையடுத்து நகைகள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது ஒருபுறம் இருக்க, தேர்தல் காலங்களில் மட்டுமின்றி ஆண்டு முழுவதும் இதுபோன்ற சோதனைகளைத் தொடர்ந்தால் சட்ட விரோதமாக கடத்தப்படும் தங்கம், வெள்ளி பொருள்களை பறிமுதல் செய்யலாம் என்பதோடு, கோடிக்கணக்கில் வணிகவரியும் வசூலாகும் என்றும் பொதுநல நோக்கர்கள் கூறுகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT