ADVERTISEMENT

கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக பெண் உள்பட 3 பேர் கைது!

10:21 AM Jun 11, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கிருஷ்ணகிரியில் போலி ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் விட்டதாக பெண் உள்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பாரதி நகரைச் சேர்ந்தவர் வேலு (57). இவர், பழைய மாவட்டக் கிளைச்சிறை செல்லும் சாலையில் கருவாடு கடை நடத்திவருகிறார். இவருடைய கடைக்கு ஜூன் 8ஆம் தேதி, இருசக்கர வாகனத்தில் ஆணும், பெண்ணும் வந்திறங்கினர். அவர்கள் வேலுவிடம் 200 ரூபாய் தாளைக் கொடுத்து, 50 ரூபாய்க்கு கருவாடு வாங்கினர். அந்த ரூபாய் தாளை தொட்டுப் பார்த்தபோது, அது போலி ரூபாய் தாளாக இருக்கலாம் என சந்தேகம் அடைந்தார் வேலு. உடனே அவர், இது கள்ள ரூபாய் நோட்டு போல இருக்கிறது. வேறு நோட்டு கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.

ஆனால் அவர்களோ வேறு ரூபாய் தாளை மாற்றிக்கொடுக்காமல் சில்லரையும் வாங்காமல், கருவாடுடன் பக்கத்துக் கடைக்குச் சென்றுவிட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த வேலு, இதுகுறித்து அங்கு ரோந்து சுற்றிவந்த காவலர் முருகனிடம் புகார் அளித்தார். இதையடுத்து காவலர் முருகன், சந்தேகத்திற்கிடமாக சுற்றிக்கொண்டிருந்த அந்த ஆண், பெண் இருவரையும் பிடித்து விசாரித்தார். இதற்கிடையே மற்ற காவலர்களையும் அலைபேசி மூலம் தகவல் அளித்து, சம்பவ இடத்திற்கு வரவழைத்தார்.

விசாரணயில் அந்த ஆண், தர்மபுரி மாவட்டம் வெள்ளிச்சந்தையைச் சேர்ந்த மாதையா என்பதும், உடன் வந்த பெண் மாரண்ட அள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு ஆயாவாக வேலை செய்துவருவதும் தெரியவந்தது. இவர்களிடம், பென்னாகரம் அருகே உள்ள எர்ரகம் பகுதியைச் சேர்ந்த முருகன் (47) என்பவர்தான் போலி ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து அனுப்பியவர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, ஏர்ரகத்தில் உள்ள முருகன் வீட்டுக்கு காவல்துறையினர் விரைந்தனர். அவரை மடக்கிப்பிடித்து விசாரித்தனர். வீட்டில் கலர் ஜெராக்ஸ் மெஷின் வைத்து, ரூபாய் நோட்டுகளைக் கலர் பிரிண்ட் எடுத்து, தெரிந்தவர்கள் மூலம் புழக்கத்திற்கு விட்டிருப்பது தெரியவந்துள்ளது. 2000 ரூபாய் நோட்டை கலர் பிரிண்ட் எடுத்தால் எப்படியும் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில் குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை அதிகளவில் கலர் பிரிண்ட் போட்டுள்ளார்.

அவருடைய வீட்டில் இருந்து போலி 500 ரூபாய் நோட்டுகள் 20, 200 ரூபாய் நோட்டுகள் 57, 100 ரூபாய் நோட்டுகள் 270 என மொத்தம் 48,400 மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகள், கலர் பிரிணடர், ஜெராக்ஸ் மெஷின் ஆகியவற்றைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

போலி ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் விட்டதாக முருகன், மாதையா, ஜோதி ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் கிருஷ்ணகிரி நகர காவல் நிலைய காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT