Six arrested for iridium scam

கோவையில் உள்ள ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து பல கோடி ரூபாய் மதிப்பிலான இரிடியம் உள்ளதாக கூறி ஒரு கும்பல், கேரளாவைச் சேர்ந்த நபர்களிடம் சோதனை செய்து காட்டிவருவதாக செட்டிபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், வீட்டில் சோதனையிட்டபோது அங்கு கட்டுக்கட்டாக கள்ளநோட்டுகள், கவச உடை, ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஆகியவற்றை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து வீட்டில் இருந்த8 பேரிடமும் போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.

Advertisment

அப்போது இரிடியம் ரைஸ் புல்லிங் விற்பனை மோசடிக்கு கூடியிருந்ததும் தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில் ராணிப்பேட்டையைச் சேர்ந்த தினேஷ்குமார், சூரியகுமார்,திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த போஜராஜ், கோவையைச் சேர்ந்த முருகேசன், செந்தில்குமார், வெங்கடேஷ் பிரபு ஆகியோர் பிடிபட்டனர். மேலும் இவர்கள், கேரளாவில் உள்ள ரைஸ் புல்லிங் மோசடி கும்பலைச் சேர்ந்த சாஜி என்பவருடன் சேர்ந்து பணத்தேவை மற்றும் குடும்ப பிரச்சனைகள் காரணமாக ரைஸ் புல்லிங் தேவைப்படுவோரை இடைத்தரர்கள் மூலம் தேர்ந்தெடுத்து இந்த மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. கேரளாவைச் சேர்ந்த மகரூப், அப்துல் கலாம் ஆகிய இரண்டு பேரை அணுகி தங்களிடம் 2 ஆயிரம் கோடி மதிப்பிலான இரிடியம் ரைஸ் புல்லிங் இருப்பதாக கூறிய இந்தக் கும்பல், பல தவணைகளாக ரூ. 27 லட்சம்வரை பணத்தைப் பறித்துள்ளனர்.

Advertisment

ஆனால் அவர்களுக்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்க இந்தக் கும்பல் சோதனை செய்து காட்டியும் பணம் பறித்துவந்துள்ளனர். அதாவது, சாதாராணவெங்கல செம்பை பெட்டிக்குள் வைத்து, பெட்டிக்குள் மிளகாய் ஸ்பிரேவை அடித்து வைத்துக்கொண்டு, பின்னர் வாங்க வருவோரிடம்கவச உடைகளை அணிந்துகொண்டு வெளியே எடுக்கும்போது, அந்த இரிடியத்திற்கு எத்தனைசக்தி உள்ளது என்பதைப் பார்த்தீர்களா? எனச் சொல்லி ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கும்பலைச் சேர்ந்த 6 பேரையும் பிடித்த போலீசார் அவர்களிடமிருந்து 99.20 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள், இரண்டு கவச உடைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர் மற்றும் 2 கார்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த மோசடியில் ஈடுபட்டு தலைமறைவான கேரளாவைச்சேர்ந்த சாஜி என்பவரை இரண்டு தனிப்படை அமைத்து போலீசார் தேடிவருகின்றனர்.