ADVERTISEMENT

அரசு வேலை வாங்கி தருவதாக 17 லட்சம் ரூபாய் சுருட்டல்... மாஜி முதல்வரின் உதவியாளர் மீது புகார்!

07:45 AM Oct 27, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேலம் அருகே, அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 17 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள பூசாரிப்பட்டியைச் சேர்ந்தவர் மணி. இவர் முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியிடம் கடந்த 10 ஆண்டுகளாக உதவியாளராக இருந்துவருகிறார்.

கடந்த அதிமுக ஆட்சியின்போது எடப்பாடி பழனிசாமியுடன் தனக்கு இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி, ஓமலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி லட்சக்கணக்கில் வசூல் வேட்டை நடத்தியுள்ளார்.

இதற்கிடையே, கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவருக்கு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் உதவிப் பொறியாளராக வேலை வாங்கிக் கொடுப்பதாகக் கூறி, அவரிடம் 17 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளார்.

இந்தப் பணத்தை தமிழ்ச்செல்வன், அவருடைய நண்பர் செல்வக்குமார் என்பவர் மூலமாக கொடுத்துள்ளார். ஆனால் சொன்னபடி மணி அவருக்கு அரசு வேலை வாங்கித் தரவில்லை.

அதனால் தன்னிடம் பெற்ற பணத்தை திருப்பித் தரும்படி தமிழ்ச்செல்வன் பலமுறை கேட்டிருக்கிறார். ஆனால் பணத்தைத் திருப்பித் தராமல் போக்குக் காட்டி வந்துள்ளார் மணி.

இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தமிழ்ச்செல்வன், இதுகுறித்து சேலம் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி மணி மீது புகார் அளித்திருந்தார்.

இதுகுறித்து சேலம் மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபிநவ் நேரடி விசாரணை நடத்தியதில், தமிழ்ச்செல்வன் தரப்பிலிருந்து மணியின் வங்கிக் கணக்கில் 17 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணி மீது மோசடி, கூட்டுச் சதி உள்ளிட்ட பிரிவுகளின் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்தனர். இதற்கிடையே மணி தலைமறைவாகிவிட்டார். அவரை மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி இளமுருகன் தலைமையில் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

மணியிடம் வேறு யாரேனும் அரசு வேலைக்காகப் பணம் கொடுத்து ஏமாந்திருந்தால் புகார் அளிக்கலாம் என்றும் மாவட்டக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT