ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு 1417 வாக்குச்சாவடிகள் அமைப்பு!

08:19 AM Mar 14, 2020 | kalaimohan

சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக 1417 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. சராசரியாக 1400 வாக்காளர்களுக்கும் குறையாத வகையில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

சேலம் மாவட்டத்தில் 2020ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக, உத்தேசிக்கப்பட்டு உள்ள வரைவு வாக்குச்சாவடிகள் விவரப்பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராமன் வெள்ளிக்கிழமை (மார்ச் 13) வெளியிட்டார். அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டது.


இதுகுறித்து ஆட்சியர் ராமன் கூறியதாவது:

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - 2020க்கான சேலம் மாநகராட்சி, ஆத்தூர், நரசிங்கபுரம், எடப்பாடி, மேட்டூர் ஆகிய நான்கு நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகளுக்கு உத்தேசிக்கப்பட்டுள்ள வரைவு வாக்குச்சாவடிகளின் விவரப்பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. ஒரு வாக்குச்சாவடிக்கு குறைந்தபட்சம் 1400க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கொண்ட வாக்குச்சாவடியாக பிரிக்கப்பட்டு உள்ளது.

சேலம் மாநகராட்சியில் ஆண் வாக்காளர்களுக்கு 5 வாக்குச்சாவடிகளும், பெண் வாக்காளர்களுக்கு 5 வாக்குச்சாவடிகளும், அனைத்து வாக்காளர்களுக்கும் 644 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 654 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இது, ஏற்கனவே 2019ல் 654 வாக்குச்சாவடிகளும் ஆண், பெண் இருபாலருக்குமானவையாக இருந்தன.

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சியில் ஆண் வாக்காளர்களுக்கு மட்டும் 22 வாக்குச்சாவடிகளும், பெண் வாக்காளர்களுக்கு மட்டும் 22 வாக்குச்சாவடிகளும், ஆண், பெண் இருபாலருக்கும் சேர்த்து 12 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 56 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆத்தூர் நகராட்சியில் கடந்த 2019ல் மொத்தம் 63 வாக்குச்சாவடிகள் இருந்தன. அவற்றில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தலா 29 வாக்குச்சாவடிகளும், அனைத்து வாக்காளர்களுக்கும் சேர்த்து 5 வாக்குச்சாவடிகளும் இருந்தன.

மேட்டூர் நகராட்சியில் ஆண்களுக்கு 16 வாக்குச்சாவடிகள், பெண்களுக்கு 16 வாக்குச்சாவடிகள், இருபாலரும் வாக்களிக்கும் வகையில் 18 என மொத்தம் 50 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. கடந்த 2019ல் மேட்டூர் நகராட்சியில் மொத்தம் 54 வாக்குச்சாவடிகள் இருந்தன.


எடப்பாடி நகராட்சியில் ஆண்கள் மற்றும் பெண் வாக்காளர்களுக்கென தலா 25 வாக்குச்சாவடிகளும், அனைத்து வாக்காளர்களுக்கும் சேர்த்து 8 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 58 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 2019ம் ஆண்டிலும் இதே எண்ணிக்கையில்தான் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

நரசிங்கபுரம் நகராட்சியில் ஆண், பெண்களுக்கு தலா 3 வாக்குச்சாவடிகளும், அனைத்து வாக்காளர்களுக்கென 15 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 21 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டு அங்கு 24 வாக்குச்சாவடிகள் இருந்தன.

சேலம் மாவட்டத்தில் உள்ள 33 பேரூராட்சிகளில் உள்ள ஆண் வாக்காளர்களுக்கு 68 வாக்குச்சாவடிகளும், பெண் வாக்காளர்களுக்கு 68 வாக்குச்சாவடிகளும், அனைத்து வாக்காளர்களுக்கும் 442 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 578 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஏற்கனவே 2019ம் ஆண்டில், மொத்தம் 448 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.


சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம் மாநகராட்சி, 4 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளுக்கு மொத்தம் 139 ஆண் வாக்காளர் வாக்குச்சாவடிகளும், 139 பெண் வாக்காளர் வாக்குச்சாவடிகளும், அனைத்து வாக்காளர்களுக்கும் 1139 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 1417 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.


கடந்த 2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 276 வாக்குச்சாவடிகள் குறைவு.


சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு உத்தேசிக்கப்பட்டுள்ள வரைவு விவரப்பட்டியல் வெளியிடப்பட்டதை அடுத்து, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆய்வு செய்து, திருத்தங்கள் இருப்பின் வரும் 18ம் தேதிக்குள் தெரிவிக்கலாம். ஆட்சேபணைகள் இருப்பின் உரிய விவரங்களுடனான கடிதத்தை சம்பந்தப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கலாம். அதுகுறித்து உரிய முறையில் பரிசீலித்து இறுதி வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு ஆட்சியர் ராமன் கூறினார்.


இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் அருள்ஜோதி அரசன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் இளங்கோவன் (உள்ளாட்சித் தேர்தல்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT