ADVERTISEMENT

1200 ஆண்டுகள் பழமையான 'செக்குகல்வெட்டு' கண்டெடுப்பு!!

06:40 PM Oct 02, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேலம் வரலாற்று ஆய்வுமையத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகளூர் பொன்.வெங்கடேசன், சங்கீதா ஆகியோர் தமிழரசன் என்பவர் கொடுத்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி அருகேயுள்ள நாகலூரில் கல்வெட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 1200 ஆண்டுகள் பழமையான செக்கு கல்வெட்டு,1080 ஆண்டுகள் பழமையான சோழர்கால கல்வெட்டு மற்றும் 17 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்றையும் கண்டறிந்து ஆய்வு செய்தனர்.

செக்கு கல்வெட்டு

பழங்காலத்தில் மின்சாரம் இல்லாதபோது வெளிச்சத்துக்கு விளக்குகளை எரியவிடவும் , சமையலுக்கும் எண்ணெய்யின் தேவை மிக முக்கியமாக இருந்துள்ளது. எண்ணெய் எடுக்கக் கல்லால் ஆன சிறு உரல் போன்ற கல்செக்குகள் பயன்படுத்தப்பட்டன. இவை கோயில் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கென செய்து தானமாகத் தரப்பட்டன. செக்கில் எண்ணைய் ஆட்டுபவர்கள் செக்குக்கு கூலியாக ஒரு குறிப்பிட்ட அளவு எண்ணெய்யை கோயிலுக்கோ, அரசுக்கோ செலுத்தினர்.

குறுநிலத்தலைவர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் போன்றோர் இதுபோன்ற கல்செக்கை உருவாக்கி தானமாக கொடுத்தனர். உடன்பிறந்தவர்கள், உறவினர்கள், நலம் பெறவும் வேண்டுதலின் பேரில் இத்தகைய செக்குகள் தானமாக தரப்பட்டன. இப்படி தானமாக தரும்போது அதை செய்து கொடுப்பவர் தன் ஊர், தந்தை பெயருடன் தன் பெயரையும் கல்வெட்டாய் அந்த கல்செக்கில் பொறித்து தரும் வழக்கமும் இருந்துள்ளது.

நாகலூர் செக்குகல்வெட்டு

நாகலூரில் மாரியம்மன் கோயில் தெருவில் சாலையில் ஓரத்தில் இருந்த ஒரு கல்செக்கு ஆய்வு செய்யப்பட்டது. கிழக்குப்புறம் சாய்ந்த நிலையில் புதையுண்ட நிலையில் கல்செக்கு காணப்பட்டது. இதன் வெளி விளிம்பு விட்டம் 67 செ.மீ, உள் விளிம்பு 54 செ.மீ, நடுவில் உள்ள குழியின் ஆழம் 32 செ.மீ ஆகவும் உள்ளது. உரலின் மையப்பகுதியில் ஒரு வரியில் கல்வெட்டு வளைவாக வெட்டப்பட்டுள்ளது. எழுத்தமைதியைக்கொண்டு இது பிற்கால பல்லவர் காலத்தை சேர்ந்ததாக கருதலாம்.1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டு இதுவாகும். கல்வெட்டானது தமிழ் மற்றும் கிரந்த மொழியில் எழுதப்பட்டுள்ளது.

ஸ்ரீ என்ற எழுத்துடன் கல்வெட்டு துவங்குகிறது. ‘'ஸ்ரீ குந்தை காடன்முரி செய்வித்தது' என கல்வெட்டில் வெட்டப்பட்டுள்ளது. இதில் குந்தை என்பது அவர் தந்தையின் பெயரையும் காடன்முரி என்பது கல்செக்கை தானம் கொடுத்தவரின் பெயராகவும் கருதலாம். ஸ்ரீகுந்தை காடன்முரி என்பவர் இந்த கல்செக்கை செய்து தந்துள்ளார் என்பது இதன் பொருளாகும். செய்வித்தது என்ற சொல்லில் வரும் ய் என்ற யகரம் இக்கல்வெட்டில் வித்தியாசமாக வெட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

முதலாம் பராந்தக சோழன் கல்வெட்டு

நாகலூரில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலின் கருவறையில் பெருமாள் சிலைக்கு முன் பதிக்கப்பட்டுள்ள ஒரு கல்லில் 14 வரிகளில் கல்வெட்டு சிதைந்த நிலையில் உள்ளது. இதில் 5 வரிகள் மட்டுமே படிக்கும் நிலையில் உள்ளது. இக்கல்வெட்டின் நீளம் 88 செ.மீ,அகலம் 64 செ.மீ ஆகும். இது 1080 ஆண்டுகளுக்கு முற்பட்ட முதலாம் பராந்தக சோழனின் முப்பத்தி மூன்றாம் ஆட்சி ஆண்டு கல்வெட்டாகும். கி.பி 940 ஆம் ஆண்டு இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. ஸ்ரீ மதுரை கொண்ட கோப்பரகேசரி வர்மருக்கு என்ற முதலாம் பராந்தக சோழனின் மெய்கீர்த்தியோடு கல்வெட்டு துவங்குகிறது. இப்போது நாகலூர் என்று அழைக்கப்படும் இவ்வூர் கல்வெட்டில் நாவலூர் என குறிப்பிடப்பட்டுள்ளது. நாவல் மரங்கள் சூழ்ந்த பகுதியாக இருந்ததால் நாவலூர் என்று பெயர் அமைந்திருக்கலாம்.17 ஆம் நூற்றாண்டு கல்வெட்டிலும் நாவலூர் என்றே குறிப்பிடுகிறது. 300 ஆண்டுகளுக்கு முன்புதான் நாவலூர் என்ற பெயர் நாகலூர் என மருவி உள்ளது. அக்காலத்தில் பரனூர் கூற்றத்தில் நாவலூர் இருந்துள்ளது.

தொண்டைமான் கல்வெட்டு

நாகலூர் வரதராஜபெருமாள் கோயில் கருவறையின் வெளிப்புறத்தில் தெற்குபக்க சுவரில் 5 வரிகளில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. எழுத்தமைதியை கொண்டு இது 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதலாம். இந்த கல்வெட்டிலும் இந்த ஊர் நாவலூர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனந்ததாண்டயத்தொண்டைமான் என்பவர் இந்த பெருமாள் கோயிலுக்கு ஆயிரம் குழி நஞ்சை நிலத்தை சர்வமாநியமாக தானம் செய்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. சந்திரன் உள்ளவரை இந்த தானம் நிலைத்திருக்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.மிகப்பழமை வாய்ந்த செக்குக்கல்வெட்டை பாதுகாக்க அரசு முயற்சி எடுக்கவேண்டும். இப்பகுதியில் மேலும் ஆய்வு செய்தால் இன்னும் பல வரலாற்று தடயங்கள் கிடைக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.



ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT