ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தில் 1000 கோடியில் வளர்ச்சி பணிகள்! அமைச்சர் நேரு தகவல்!!

07:39 AM Jun 17, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா, வெள்ளி கொலுசு உற்பத்தி மையம், பாதாளச் சாக்கடைத் திட்டம், சாலைகள் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1000 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளார் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சேலத்தில், பல்வேறு துறைகளின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை (ஜூன் 16) நடந்தது. மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமை வகித்தார். தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, 486 பயனாளிகளுக்கு 2.43 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் அவர் பேசியதாவது, "மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னிடம் வைத்துக்கொண்டு, உடனுக்குடன் அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்து வருகிறார். அந்த வகையில், ஒரே நாளில் 168 மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டது சேலத்தில்தான்.

சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. மாற்றுத்திறனாளிகள் மிகவும் கவனமுடன் வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும். உங்களுக்கு உதவிட முதல்வர் அறிவுறுத்தியதன் பேரில், சேலம் மாவட்ட அதிகாரிகள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். 75 ஆயிரம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதில், முதல்வரே நேரில் வந்து 35 ஆயிரம் மனுக்களுக்குத் தீர்வு கண்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கினார். எஞ்சிய மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து, ஒவ்வொரு வாரமும் மாவட்ட ஆட்சியர் உதவிகளை வழங்கி வருகிறார்.

இதையடுத்து, 2 ஆயிரம் குடும்பங்களுக்குப் பட்டா வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 120 கோடி ரூபாயில் பாலம் கட்டப்படுகிறது. பனைமரத்துப்பட்டி ஏரியைச் சீரமைத்து, சேலம் மாநகராட்சிக்குத் தடையின்றி குடிநீர் வழங்க 99 கோடி ரூபாயை முதலமைச்சர் ஒதுக்கி உள்ளார்.

மூக்கனேரியை மேம்படுத்த 30 கோடி ரூபாய், போடிநாயக்கன்பட்டி ஏரியைச் சீரமைக்க 21 கோடி, அல்லிக்குட்டை ஏரியை மேம்படுத்த 18 கோடி என மொத்தம் 167 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது.

ஒருங்கிணைந்த வெள்ளிக் கொலுசு மையம் 25 கோடி ரூபாயில் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. 100 ஏக்கரில் ஜவுளிப்பூங்கா அமைப்பது தொடர்பாகத் தொழில் அதிபர்களுடன் ஆலோசித்து இடம் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

மேலும், 20 கோடி ரூபாயில் ஒருங்கிணைந்த விளையாட்டுத் திடலை சிறைத்துறைக்குச் சொந்தமான இடத்தில் ஏற்படுத்திட ஆய்வு செய்து வருகிறோம். குடிநீர், சாலை சீரமைப்பு, பாலம், பாதாளச் சாக்கடைத் திட்டப்பணிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் நடந்து வருகின்றன.

இந்த வகையில் சேலம் மாவட்டத்திற்கு மட்டும் நடப்பு ஆண்டில் 1000 கோடி ரூபாயை முதல்வர் ஒதுக்கி உள்ளார்." இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

இந்த விழாவில், பார்த்திபன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், அருள், சதாசிவம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதா தேவி, ஆணையர் கிறிஸ்துராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT