ADVERTISEMENT

100 கோடி மதிப்புள்ள நிலம்... ஏமாற்றும் அரசு அதிகாரி... கண்டுகொள்ளாத காவல்துறை!!

04:59 PM Feb 04, 2020 | kalaimohan

திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலையில் உள்ள முத்தானூர் கிராமத்தில் சுமார் 75 ஆண்டுகளுக்குமுன்பு நியூமேன்துரை என்பவர் வசித்துவந்தார். அவருக்கும், அவரது சகோதருக்குமாக சேர்த்து மலையில் 44 ஏக்கர் நிலம் வாங்கி வைத்திருந்துள்ளனர். அந்த நிலத்தை 1954ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த கோபால்ரத்தினம் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். கோபால் ரத்தினம் இறந்துவிட அவரது மனைவி மகீதா ரத்னம் நிலத்தை விற்பனை செய்ய முடிவெடுத்து ஒரு பகுதியை விற்பனை செய்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


அந்த வகையில் அவரிடமிருந்து திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த இக்பால் என்பவர் தனது மனைவி பகீம்பேகம் பெயரில் 12 ஏக்கர்நிலத்தை வாங்கியுள்ளார். அதில் 6 ஏக்கர் நிலத்தை வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்துள்ளார். இதனை திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களை சேர்ந்த பலர் மலைவாஸ்தலம் என மனைகளை வாங்கியுள்ளனர்.

வாங்கிய ஒருவரால் கூடஅங்கு வீடு கட்டமுடியவில்லை. அதற்கு காரணம் அங்குள்ள அரசு ஊழியரான மலைவாசியான ஒருவர், இது என் இடம் எனச்சொல்லி தகராறு செய்து தனது உறவினர்கள் மூலமாக மிரட்டியுள்ளனர். இதனால் பலரும் இடம் வாங்கியும் வீடு கட்ட முன்வரவில்லை. இரண்டு பேர் மட்டும் கூட்டுறவுகடன் சங்கத்தின் கடன் வாங்கி வீடு கட்டியுள்ளனர், அங்குகுடி வர முயற்சிக்க அவர்களை அந்த அரசு ஊழியர் விடாமல் மிரட்டியுள்ளார்.

இதுதொடர்பாக இடம் வாங்கியவர்கள், வீடு கட்டியவர்களுக்கும் மனை விற்பனை செய்த இக்பால் என்பவருக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். காவல் துறையின் நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவுக்கும் சென்றது. அவற்றிலெல்லாம் இக்பால் தரப்புக்கே நிலம் என்கிற ரீதியில் முடிவாகியிருக்கிறது. நீதிமன்ற தீர்ப்பு வந்த நிலையிலும், அந்த இடத்தின் அருகில் கூட நில உரிமையாளர்களை விடாமல் அடாவடி செய்துள்ளார் அந்த அரசு ஊழியர். இவருக்கு ஏலகிரி காவல்துறை அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளார்கள்.


இந்நிலையில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று தருமபுரியை சேர்ந்த வீட்டுமனை உரிமையாளர் பழனிச்சாமி, தான் வாங்கிய மனைக்கு சென்று அவற்றை சீர்படுத்தச் முயன்றனர். அப்போது சிலர் வந்து அவர்களை மிரட்டி விரட்டியிருக்கிறார்கள். அதுபற்றி ஏலகிரி காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளனர். அவர்கள் மிரட்டியவர்களுக்கு சாதகமாக பேசி மிரட்டியதால் திரும்பி வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 02.02.2020 அன்றுவீட்டுமனை உரிமையாளர்கள் மனைகளை சீர்படுத்த இயந்திரங்கள் சகிதமாக சென்றனர். ஆதாரத்துக்காக வீடியோ கிராபரை உடன் அழைத்து சென்று பணிகளைமேற்கொண்டிருந்த போது, கூலிப்படையுடன் வந்த அந்த சிலர், மனையின் உரிமையாளர்களில் ஒருவரான தர்மபுரி மாவட்டம் கொல்லஹள்ளி பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவர் மீது கொலைவெறிதாக்குதல் நடத்தியுள்ளனர்.

ரத்தம் சொட்ட சொட்ட பழனிசாமி மற்றும் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதனால் மலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவயிடத்துக்கு சென்ற காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் போலீசாரிடம், பழனிச்சாமியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்துள்ளனர். அடித்தவர்களை அடையாம் காட்டியுள்ளார் பழனிச்சாமி. அதற்கான ஆதாரமாக வீடியோ பதிவுகளை தந்துள்ளார்.

நீ எப்படி அடிச்சதெல்லாம் வீடியோ எடுக்கலாம் என வீடியோ கேமராவை பிடுங்கிக்கொண்ட போலீஸார், அவர்களை சாலை மறியல் செய்யறதை விட்டு எழுந்து போங்க என மிரட்டியுள்ளார்கள். எங்கள் இடம், நீதிமன்ற தீர்ப்பு குறித்த நகல்கள் தந்தபோது, அதெல்லாம் வாங்க முடியாது. அவுங்க சொல்றதை கேட்டு ஓடிப்போங்க என அனைவர் முன்னிலையிலும் மிரட்டியுள்ளனர் போலீஸார். அதன்பின் திருப்பத்தூர் டி.எஸ்.பி தங்கவேல் வந்து சமாதானம் செய்து சாலைமறியலை கைவிட செய்துள்ளார்.

தாக்கப்பட்ட பழனிச்சாமி தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில் தன்னை தாக்கிவிட்டதாக பாப்பாத்தி என்பவர் பழனிச்சாமி மீது புகார் தந்துவிட்டு மருத்தவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இக்பால் மனைவி வாங்கிய 12 ஏக்கர் நிலமும், மீதமுள்ள 32 ஏக்கர் எனமொத்தம் 44 ஏக்கரை அபகரிக்க முயல்கின்றனர். அதன் மதிப்பு 100 கோடி என்கிறார்கள் விலை நிலவரம் அறிந்தவர்கள். அதனை ஆவணங்கள் எதுவும்மில்லாமல் அபகரிக்க சிலர் முயற்சி செய்ய காவல்துறை உடந்தையாக உள்ளது என்கிறார்கள் மலையை சேர்ந்த விபரம் அறிந்தவர்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT