ADVERTISEMENT

''இதனால்தான் தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை என்று அண்ணா சொன்னார்''-மு.க.ஸ்டாலின் பேச்சு!

06:45 PM Jan 25, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், திமுக மாணவரணி சார்பில் வீர வணக்க நாள் கூட்டம் இன்று தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. காணொளி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ''தாளமுத்து நடராஜன் என்ற பெயரில் மாபெரும் மாளிகையை எழும்பூரில் அமைத்து பெருமை சேர்த்தார் கலைஞர். 1938-ல் தொடங்கிய போராட்டம் 1940-ஆம் ஆண்டு இந்தி கட்டாயம் இல்லை என அறிவிக்கப்படும் வரைக்கும் நடைபெற்றது. 1948 ஆம் ஆண்டு மீண்டும் இந்தி திணிக்கப்பட்டது. அப்போதும் பெரியாரும், அண்ணாவும் போர்ப்பரணி பாடினார்கள். இரண்டு ஆண்டுகாலம் அந்த போராட்டம் நடந்தது. 1963ஆம் ஆண்டு மீண்டும் இந்தி ஆதிக்கம் தலைவிரித்தாடியது. அண்ணாவும், கலைஞரும் அமைத்த போர்க்களம் என்பது இரண்டு ஆண்டுகாலம் தமிழகத்தில் நீடித்தது.

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவினரும் பங்கெடுத்து சிறை சென்றார்கள். ஆறு மாதம் முதல் அதிகபட்சம் ஒன்றரை ஆண்டுகள் வரை சிறையில் வாடினார்கள். மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கைதான திமுகவினர் ஓராண்டு சிறை தண்டனை பெற்றார்கள். காஞ்சி, குமரி, கோவை, சென்னை ஆகிய ஊர்களில் கைதானவர்கள் 6 மாத கால சிறை தண்டனை பெற்றார்கள். மற்ற மாவட்டங்களில் கைதானவர்கள் 3 மாதம் முதல் 6 மாதம் வரை தண்டனை பெற்றார்கள். திமுக முன்னணி செயல் வீரர்கள் அனைவரும் சிறைப்பட்டார்கள். இதுதான் தமிழ்நாட்டினுடைய மொழி போராட்டத்தின் வரலாறு. இந்த இரண்டு ஆண்டுகால எழுச்சிதான் 1965 ஆம் ஆண்டு மாணவர் சமுதாயத்தை மாபெரும் கிளர்ச்சிக்கு தயாராக்கியது. தங்களது உடலில் தாங்களே தீ வைத்து கீழப்பழுவூர் சின்னசாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், ஆசிரியர் வீரப்பன், கீரனூர் முத்து, சாரங்கபாணி போன்றோரும், அமுதம் அருந்துவது போல விஷமருந்தி மறைந்த தண்டாயுதபாணி, முத்து, விராலிமலை சண்முகம் போன்றோரும் மொழிக்காக தங்கள் உயிரையே தந்தார்கள். இன்றைக்கு படங்களாக இருந்து நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீரர்கள். மொழி போர்க்களத்தின் முதல் தியாகி கீழப்பழுவூர் சின்னச்சாமி. இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தொண்டன். தனது மகளுக்கு திராவிடச் செல்வி என்று பெயர் சூட்டி இருந்தார் சின்னச்சாமி.

சென்னை கோடம்பாக்கத்தில் தீக்குளித்த சிவலிங்கம் அவருடைய வயது 21. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டராக நுங்கம்பாக்கம் பகுதி கழகத்தின் பொருளாளராக இருந்து பணியாற்றி இருக்கிறார். தீக்குளித்த விருகம்பாக்கம் அரங்கநாதன் ஒன்றிய அரசினுடைய தொலைப்பேசி துறையில் ஊழியராக பணியாற்றியவர் அவரும் திமுகவின் தொண்டர் தான். சத்தியமங்கலம் முத்து என்கின்ற திமுக தொண்டர் தீக்குளித்தார். அவருக்கு வயது 22. ஐயம்பாளையம் ஆசிரியர் வீரப்பன் தீக்குளித்தார். அவரும் திமுகவைச் சார்ந்தவர் தான். 22 வயதான விராலிமலை சண்முகம் திமுகவின் தொண்டர். திருச்சி பாலக்கரையில் 16 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பாலத்துக்கு கீழப்பழுவூர் சின்னசாமி, விராலிமலை சண்முகம் ஆகியோர் நினைவாக சின்னசாமி-சண்முகம் பாலம் என்று பெயர் சூட்டினார் கலைஞர்.

மொழிப்போர் தியாகிகளால் தமிழினம் மேன்மை அடைந்துள்ளது. மொழிப்போர் தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைத்தவர் கலைஞர். அதனால்தான் 1967ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் அத்தகைய உணர்வோடு அண்ணா அதற்காகவே இந்த ஆட்சியை நடத்திக் காட்டினார். மாணவர்களின் தாகத்தை மதிக்கக் கூடிய வகையில் இந்திக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை என்றும் அண்ணா அறிவித்தார். 'தமிழும்-ஆங்கிலமும்' என்ற இரு மொழிக் கொள்கையைச் சட்டமாக்கினார் அண்ணா'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT