ADVERTISEMENT

பெண் கவுன்சிலரின் வீடியோ, ஆடியோ வெளியீடு; சேலம் மாவட்டத்தில் திமுக, அதிமுக அரசியல் சடுகுடு!

06:36 PM Jan 28, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தில் ஒன்றியக்குழுத் தலைவர் பதவியைக் கைப்பற்றுவதற்காக அதிமுக பெண் கவுன்சிலர்களை கடத்தியதாக திமுக கவுன்சிலர் மீது புகார் கிளம்பிய நிலையில், சம்பந்தப்பட்ட பெண் கவுன்சிலரிடம் இருந்து முரண்பட்ட ஆடியோ, வீடியோ பதிவுகள் வெளியானது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுவில் மொத்தம் 13 கவுன்சிலர்கள் உள்ளனர். இதன் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த ஜெகநாதன் இருந்து வந்தார். கடந்த 2019 டிசம்பரில் நடந்த முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் திமுக தரப்பில் 5 பேரும், அதிமுக தரப்பில் 6 பேரும், பாமக, இ.கம்யூ., தரப்பில் தலா ஒருவரும் வெற்றி பெற்றனர். பாமக ஆதரவுடன் அதிமுகவின் ஜெகநாதன், ஒன்றியக்குழுத் தலைவராக பதவியேற்றார்.

ஜெகநாதன்

இந்நிலையில்தான், 9வது வார்டு கவுன்சிலராக இருந்த திமுகவை சேர்ந்த பாரப்பட்டி குமார் இறந்துவிடவே, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அந்த வார்டுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில், திமுகவைச் சேர்ந்த பாரப்பட்டி சுரேஷ்குமார் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனார். தற்போது திமுக, ஆட்சிக் கட்சியாக உள்ள நிலையில், அதிமுக தரப்பில் அதிருப்தி கவுன்சிலர்களை தங்கள் பக்கம் இழுப்பதன் மூலம் பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழுத் தலைவராகி விடலாம் என கணக்குப்போட்டு, காய் நகர்த்தினார் பாரப்பட்டி சுரேஷ்குமார்.

அதற்கு கைமேல் பலனும் கிடைத்தது. தலைவராக உள்ள ஜெகநாதன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டுமானால் தனக்கு குறைந்தபட்சம் 10 கவுன்சிலர்களின் ஆதரவு தேவை என்பதால், அதிமுக தரப்பில் இருந்து பூங்கொடி, சங்கீதா, நிவேதா ஆகியோரை தனது ஆதரவாளராக மாற்றினார். இதற்காக அவர்களுக்கு தலா 15 லட்சம் ரூபாய் வரை பாரப்பட்டி சுரேஷ்குமார் தரப்பில் கொடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுரேஷ்குமார்

இதையடுத்து ஜனவரி 21ம் தேதி, ஜெகநாதன் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த சூழ்ச்சிகளை தாமதமாக புரிந்து கொண்ட அதிமுகவின் ஜெகநாதன், ஜனவரி 20ம் தேதி இரவு, பூங்கொடி, சங்கீதா, நிவேதா, காவேரி சித்தன், மஞ்சுளா ஆகியோரை அழைத்துக் கொண்டு பவானி கூடுதுறையில் உள்ள கோயிலுக்குச் சென்றிருக்கிறார். மறுநாள் தனக்கு எதிரான வாக்கெடுப்பில் இவர்களை கலந்து கொள்ளாமல் இருக்கச் செய்துவிட்டால், மீண்டும் தன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர ஓராண்டு ஆகும் என ஜெகநாதனும் கணக்குப் போட்டிருந்தார்.

இந்நிலையில், ஜனவரி 20ம் தேதி இரவு 10.45 மணியளவில், குமாரபாளையம் கத்தேரி அருகே ஜெகநாதனின் காரை 30க்கும் மேற்பட்டோர் கொண்ட ஒரு கும்பல் சுற்றி வளைத்தது. பல கார்களில் திபுதிபுவென வந்திறங்கிய மர்ம நபர்கள் பூங்கொடி, சங்கீதா ஆகியோரை தங்கள் கார்களில் கடத்திக்கொண்டு சென்றுள்ளனர். பாரபட்டி சுரேஷ்குமார்தான் ரவுடிகளை அனுப்பி பெண் கவுன்சிலர்களை கடத்திச்சென்று விட்டதாக அன்றிரவே குமாரபாளையம் காவல்நிலையத்தில் ஜெகநாதன் புகார் அளித்தார். அந்தப் புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆனால், ஜன. 21ம் தேதி அதிமுக கவுன்சிலர்கள் பூங்கொடி, சங்கீதா ஆகியோர் ஜெகநாதனுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். அதன்பிறகு ஊடகங்களிடம் பேசிய அவர்கள், தங்களை யாரும் கடத்திச்செல்லவில்லை. நாங்களாக வந்துதான் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தோம் என்று கூறினர். இதுகுறித்து நக்கீரன் இணையத்தில் ஏற்கனவே ஜன.22ம் தேதி விரிவாக செய்தி வெளியிட்டு உள்ளோம்.


இதில் மூக்குடைபட்ட அதிமுகவின் ஜெகநாதனை, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக வறுத்தெடுத்து விட்டதாக ஜெகநாதனே நம்மிடம் கூறினார். அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து, கவுன்சிலர் பூங்கொடி, சங்கீதா ஆகிய இருவரின் வீட்டுக்கும் மல்லூர் காவல்துறையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.

இதையடுத்து, கவுன்சிலர் பூங்கொடியை தொடர்பு கொண்டு ஜெகநாதனும், அவருடைய மகன் சுபதீசும் பேசியுள்ளனர். அப்போது பூங்கொடி, தன்னை திமுகவின் பாரப்பட்டி சுரேஷ்குமார் கடத்திச் சென்றதாகவும், மிரட்டி கையெழுத்துப் போட வைத்ததாகவும் பேசிய ஆடியோ ஜன. 24ம் தேதி வெளியானது. ஜெகநாதனுடன் பூங்கொடி பேசும் ஆடியோ உரையாடல் விவரம்:

ஜெகநாதன்: கண்ணு... உடம்பு எப்படிமா இருக்குது?

பூங்கொடி: கை, கால்தான் ரொம்ப வலிக்குது அண்ணா. ஆஸ்பத்திரிக்கு போலாம்னு இருக்கேன்.

ஜெகநாதன்: பாரப்பட்டி சுரேஷ்குமார் என்னா கண்ணு ரொம்ப மிரட்டினானா?

பூங்கொடி: ஆமாங்ணா... மீடியால நீ இப்படித்தான் பேசணும். நாங்களா விருப்பப்பட்டுதான் வந்தோம்னு பேசணும். இந்த வேலை எல்லாம் வேணாம்னுதான் பத்து வருஷமா நிறுத்தி வெச்சிருந்தேன். மறுபடியும் செய்ய வெச்சிடாதீங்கனு சொன்னாருணா. அப்ப உமாசங்கர் அண்ணனும் கூட இருந்தாரு...


ஜெகநாதன்: குமாரபாளையம் பிரிவு ரோட்டுல கடத்துனானுங்கள்ல... என்னை லாக் பண்ணிட்டானுங்க...


பூங்கொடி: (தேம்பித்தேம்பி அழுதபடியே...) நான் கத்து கத்துனு கத்தினேன் அண்ணா... உங்களை நம்பித்தானே எங்க வூட்டுக்காரரு அனுப்பினாரு... உங்களுக்கே தெரியும்... யார் கூடவாவது இதுவரைக்கும் போயிருப்பேனா... அண்ணா நாம ஹோட்டலில் சாப்பிட்டபோதே நம்மை அந்த பசங்க எல்லாம் கண்காணிச்சுட்டே இருந்திருக்கானுங்க அண்ணா.... நாம என்ன என்ன சாப்பிட்டோம்னு கூட பசங்க சொல்றானுங்க அண்ணா...


ஜெகநாதன்: உங்களை எங்கே கூட்டிட்டுப் போனாங்க...?

பூங்கொடி

பூங்கொடி: என்ன ரோடுனே தெரியலைணா... கார் பறந்த வேகத்துல எங்கேயாவது இடிச்சியிருந்தா அத்தனை பேரும் செத்திருப்போம்ணா... அப்படி பறக்குது... பாத்ரூமு கூட போக உடலைணா.... மறுநாள் காலையில ரெண்டு பேருக்கும் புடவை எடுத்துக் கொடுத்து, அதை கட்டிக்கிட்டு போங்கனு சொன்னாங்க. அதைக்கூட சோபால தூக்கிப் போட்டுட்டு நாங்க கட்டிக்கிட்டுப் போன புடவையோடதான் போனோம்... காலையில சோறுகூட சாப்பிடல... நானும் சங்கீதாவும் டீ கூட குடிக்கலணா (மறுபடியும் தேம்பினார்...)


ஜெகநாதன்: சரி கண்ணு... கையெழுத்து போட்டே ஆகணும்தான் மிரட்டினானுங்களா....


பூங்கொடி: மிரட்டிதான் கூட்டிக்கிட்டே போனாங்க. உமாசங்கர் அண்ணன் வீட்டுக்குப் பின்னாடி ஒரு காட்டுல வெச்சி, நம்பிக்கை இல்லா தீர்மானத்துல கையெழுத்துப் போட்டுட்டு, அப்படியே வீட்டுக்குப் போய்டுங்க. மீடியாவுல ஏதாவது கேட்டா எங்கள கடத்துலனு சொல்லிடுங்க. மாத்தி ஏதாவது சொன்னீங்கனா... அவ்வளவுதான்... நான் அப்புறம் எதுவும் சொல்ல மாட்டேன்னு சுரேஷ்குமாரும், மத்த பசங்களும் மிரட்டினாங்க...


ஜெகநாதன்: மாத்தி ஏதாவது சொன்னீங்கனா ஏதாவது பண்ணிப்புடுவேன்னு சுரேஷ் சொன்னானா?


பூங்கொடி: ம்...ணா... அண்ணா... வேற என்னணா பண்ண முடியும்... உங்களுக்கு ஆதரவா போட்டுட்டு வந்தாகூட சமாளிச்சுடுவேண்ணா... எம்புள்ளைங்க மேல கூட உங்களுக்கு ஆதரவா இருப்பேன்னுதான் சத்தியம் கூட பண்ணியிருக்கேன். அவங்க பிளான் என்னனா... என் வீட்டுக்காரரும், சங்கீதா வீட்டுக்காரரும் கவர்மென்டு வேலைல இருக்கறதால மிரட்டினா கட்டுப்படுவாங்கனு கடத்திட்டாங்கணா... அவங்க கடத்தினதுல என் கை தோள்பட்டை இறங்கிடுச்சுணா... ஆஸ்பத்திரிக்கு போகணும்ணா...


இவ்வாறு ஜெகநாதனிடம் பூங்கொடி கூறியிருக்கிறார்.


இதையடுத்து, ஜெகநாதனின் மகனிடம் பேசிய இரண்டு ஆடியோ பதிவுகளும் வெளியாகின. இதன் அடிப்படையில் அதிமுக வழக்கறிஞரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இன்பதுரை ஜன. 24ம் தேதி, டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனால் பதறிப்போன பாரப்பட்டி சுரேஷ்குமார் தரப்பு, பூங்கொடியைப் பிடித்து அவரையே தங்கள் தரப்புக்கு ஆதரவாக வீடியோ வெளியிடச் செய்துள்ளனர். அந்த வீடியோவும் தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.


வீடியோவில் பூங்கொடி பேசியிருப்பதாவது:


''நான் 5வது வார்டு கவுன்சிலர் பூங்கொடிங்க. நாங்க விருப்பப்பட்டுதான் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் கையெழுத்துப் பதிவிட்டோம். இதில் யாருடைய தூண்டுதலும் இல்லை. வீரபாண்டி எம்.எல்.ஏ. ராஜமுத்து, ஒன்றிய செயலாளர் பாலச்சந்தர், ஜெகநாதன் ஆகியோர் என்னை மிரட்டி தொந்தரவு கொடுத்ததால்தான் ஆடியோ பதிவு வெளியிட்டோம். நாங்களாக விருப்பப்பட்டு ஆடியோ வெளியிடவில்லை. அவர்களால் எங்கள் உயிருக்கு பாதுகாப்பு கிடையாது. நானும் சங்கீதாவும் விருப்பப்பட்டுதான் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் கையெழுத்துப் போட்டோம்,'' என்று வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார் பூங்கொடி.


இப்படி பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் ரீதியில் கவுன்சிலர் பூங்கொடியின் முன்னுக்குப் பின் முரணான ஆடியோ, வீடியோ ஸ்டேட்மெண்டுகளால் மாங்கனி மாவட்டத்தில் திமுக, அதிமுகவின் அரசியல் சடுகுடு ஆட்டம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திமுகவின் பாரப்பட்டி சுரேஷ்குமாரோ, தான் யாரையும் கடத்தவில்லை என்று அதிமுகவினர் கூறிய புகாரை மறுத்திருக்கிறார்.

சங்கிதா


இது ஒருபுறம் இருக்க, பாரப்பட்டி சுரேஷ்குமாருக்கு தற்போது திமுக தரப்பில் 5, அதிமுக ஆதரவு கவுன்சிலர்கள் 3 பேர், பாமக, இ.கம்யூ., தரப்பில் தலா ஒருவர் என மொத்தம் 10 கவுன்சிலரின் ஆதரவு இருக்கிறது. ஆனால், மெஜாரிட்டி பெற மேலும் ஒரு கவுன்சிலர் அதாவது 11 கவுன்சிலர்களின் ஆதரவு தேவை என்ற சலசலப்புகளும் எழுந்துள்ளன.

இது தொடர்பாக நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்திய சங்ககிரி கோட்டாட்சியர் வேடியப்பனிடம் கேட்டபோது, ''மெஜாரிட்டியை நிரூபிக்க மொத்தம் உள்ள உறுப்பினர்களில் ஐந்தில் நான்கு பங்கு இருக்க வேண்டும். பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 13 உறுப்பினர்கள் உள்ளனர்.

அதன்படி கணக்கிட்டால் மெஜாரிட்டிக்கு 10.4 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. நாங்கள் வாக்கெடுப்பை நடத்தி முடித்துவிட்டோம். இப்போதுள்ள மெஜாரிட்டி போதுமா இல்லையா என்பதை மாநில தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்கும். நாங்கள் சொல்வதற்கு ஒன்றும் இல்லை,'' என்று மழுப்பலான பதிலைச் சொன்னார்.


இந்த தசமபின்ன கணக்கு திமுக, அதிமுகவினரிடையே மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT