ADVERTISEMENT

என்னையும், குரு குடும்பத்தினரையும் அழிக்க நினைக்கிறார்கள்: நான் பிரச்சாரம் செய்தால் பாமக தோல்வி உறுதி: வேல்முருகன் 

04:33 PM Mar 16, 2019 | rajavel

ADVERTISEMENT

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

ADVERTISEMENT

அப்போது, ''காடுவெட்டி குரு குடும்பம் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இருக்கின்ற 20க்கும் மேற்பட்ட வன்னியர் சங்க தலைவர்கள் அனைவருமே என்னை மருத்துவமனைக்கு வந்து பார்த்தார்கள். ராமதாஸ் இந்த ஜாதியை கூறுபோட்டு விற்றுவிட்டார். இந்த ஜாதியை எடப்பாடி பழனிசாமியிடம் ரேட் பேசி விற்றுவிட்டார்.


கடந்த பாராளுமன்றத் தேர்தலில் விஜயகாந்த் இருக்கும் மேடையில் ஏறமாட்டேன் என்று சொன்ன ராமதாஸ், இன்று விஜயகாந்த் வீட்டுக்கு சால்வையோடு சென்று பல் இளிக்கிறார் என்றால் என்ன அர்த்தம்? வேல்முருகனுக்கு ஆதரவு இருக்கிறது என்பதால். அவர் தனியாக சர்வே பண்ணுவார். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., கல்வி அதிகாரிகள் உள்பட பலரை வைத்து சர்வே எடுப்பார். அந்த சர்வேயில் அவருக்கு என்ன ரிசல்ட் என்றால், ஐயா இனி தமிழ்நாட்டில் பல கிராமங்களுக்கு சென்று நீங்கள் வாக்கு கேட்டுவிட்டு, காரித் துப்புள் இல்லாமல் வெளியே வர முடியாது என்று ஒரு ரிப்போர்ட் அவரது கைக்கு போயுள்ளது.

அதனால்தான் மோடி இருக்கும் மேடையில் விஜயகாந்த் இருந்தால் ஏறமாட்டேன் என்று சொன்ன ராமதாஸ், சால்வை எடுத்துக்கொண்டு ஓடோடிப்போய் விஜயகாந்த் வீட்டில் நிற்கிறார் என்றால், வேல்முருகனுடைய வலிமையும் வேல்முருகனுக்குப் பின்னால் இருக்கக் கூடிய சொந்தச்சாதி மக்களும், தமிழ்சாதி மக்களும் நிற்கிறார்கள். இதற்கு அவரது நடவடிக்கைகளே காரணம்.

காடுவெட்டி குரு அம்மாவை அடித்து கையை உடைத்து, மீன்சுருட்டியில் மூன்று வழக்கு போட்டு, குரு மகனை கடத்தி கொலை மிரட்டல் விடுத்தது ஒரு கும்பல். ஆறு மாதமாக குருவின் குடும்பத்தை கண்டுகொள்ளவில்லை. ஆனால் இன்று, கனல் (குருவின் மகன்) திரும்பி வந்தால் ஏற்க தயார், அவர்களுக்கு வீடு கட்டித்தர தயார், அவர்களின் கடனை அடைக்க தயார் என்று ராமதாஸ் சொன்னாரா இல்லையா? ஆறு மாதமாக குருவின் குடும்பத்திற்கு பல இன்னல்களையும் துன்பங்களையும் கொடுத்துவிட்டு இப்போது ஏன் அப்படி சொல்கிறார். வேல்முருகன் ஒட்டுமொத்த வன்னியர்களின் குரலாக மாறி வருகிறான் என்பதற்காக சொல்லுகிறார்.

என்னையும், குரு குடும்பத்தினரையும் காவல்துறையின் துணையோடு அழிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த தேர்தலில் நான் எங்கும் பிரச்சாரம் செய்யக்கூடாது, எங்கும் ஓட்டுக்கேட்டுவிடக்கூடாது, தேர்தலில் போட்டியிடக்கூடாது என்பதற்காகத்தான் 2018ல் காவேரி பிரச்சனைக்காக நடத்திய பேரணிக்காக நேற்று என் மீது வழக்குப்போட்டுள்ளார்கள். தீர்ப்பை நீங்கள் (செய்தியாளர்களைப் பார்த்து) வழங்குங்கள். வேல்முருகன் விரைவில் குண்டாஸில் உள்ளே போகிறார்கள் என்று ஒரு இணையதளத்தில் செய்தி படித்தேன். ஏன்? வெளியே இருந்தால் வேல்முருகன் பிரச்சாரத்திற்கு செல்வான் என்பதற்காக. நான் பிரச்சாரம் செய்தால் 7 தொகுதிகளில் பாமக தோல்வி உறுதி''. இவ்வாறு கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT