கடுமையான குடல் வலி பிரச்சனைகளால் சென்னை காவேரி மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன். பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அவரை சந்தித்து உடல்நலம் விசாரித்துவிட்டு செல்கின்றனர்.
இந்த நிலையில், பழைய வழக்குகளில் அவரை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் தள்ள எடப்பாடி அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கசிகின்றன!

இது குறித்து நம்மிடம் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள், ‘’வன்னியர் தலைவர்களை ஒடுக்குவதில் முந்தைய ஜெயலலிதா அரசைப் போலவே தற்போதைய எடப்பாடி அரசும் திட்டமிடுகிறது. திமுகவின் மூத்த தலைவராகவும் சேலம் மாவட்டத்தில் அசைக்க முடியாத சக்தியாகவும் இருந்த வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த வீரபாண்டி ஆறுமுகத்தை கைது செய்து சிறையில் அடைத்தார் ஜெயலலிதா.
சிறையில் அவர் அனுபவித்த கொடுமைகள் அதிகம். முறையான உணவுகள் கூட அவருக்கு அப்போது வழங்கப்படவில்லை என தகவல்கள் வந்தன. சிறையில் இருந்து வெளியே வந்த வீரபாண்டியாரின் உடல் நலம் தேறவே இல்லை. உடல் நலிவுற்று ஒரு கட்டத்தில் மரணமடைந்தார். அதேபோல, வன்னியர் சங்கத்தலைவர் காடுவெட்டி குருவை கைது செய்து சிறையில் அடைத்தார் ஜெயலலிதா. சிறையிலிருந்து வெளியே வந்த குருவின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. உடல்நிலை தேறவே இல்லை. அவரும் சமீபத்தில் இறந்து போனார்.
அதேபோல, ஸ்டெர்லைட் பிரச்சனைக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்திய நிலையில், வன்னியர் இளைஞர்களின் நம்பிக்கையைப் பெற்ற வேல்முருகனை மட்டும் கைது செய்து சிறையில் அடைத்தது தற்போதைய எடப்பாடி அரசு.
சிறையில் இருந்த ஒரு மாதமும் கொடுமையை அனுபவித்தார். அடிப்படை வசதிகள் கூட அவருக்கு மறுக்கப்பட்டன. சரியான உணவுகள் தரப்படவில்லை. இதை எதிர்த்து உண்ணாவிரதம் போராட்டத்தை வேல்முருகன் நடத்திய போதும், அவரது கோரிக்கைகளை நிறைவேற்றாமல் கொடுமைப்படுத்தினர்.
சிறையில் கொடுத்த உணவுகள் ஒத்துக்கொள்ளாமல் பலமுறை வாந்தி எடுத்தார் வேல்முருகன். அப்போதும் கூட சரியான உணவு வழங்கப்படவில்லை. சட்டப் போராட்டங்கள் நடத்தி சிறையிலிருந்து வெளியே வந்தார் வேல்முருகன். அன்றிலிருந்தே குடல் ரீதியான பல பிரச்சனைகள் ஏற்பட்டு தொடர்ந்து மருத்துவமனைக்கு அலைந்து கொண்டிருந்த அவர், தற்போது மருத்துவமனையில் அட்மிட்டாகும் சூழல் வந்து விட்டது.
அதிமுக கூட்டணியில் பாமக இணைந்திருப்பதால் வட தமிழகத்தில் அக்கூட்டணிக்கு எதிராக தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டமிட்டிருக்கிறார் வேல்முருகன். அதேபோல, காடுவெட்டி குருவின் குடும்பத்தினர், பாமகவுக்கும் அதிமுகவுக்கும் எதிராக களமிறங்கும் நோக்கத்தில் வேல்முருகனோடு இணைந்துள்ளனர். வேல்முருகனும் அக்குடும்பத்தினர் மூலம் அதிமுக-பாமகவுக்கு எதிரான தேர்தல் பணிகளை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மூலம் முன்னெடுக்கும் ஆலோசனைகளை நடத்தி வருகிறார். வேல்முருகனின் இத்தகையை திட்டமிடல்கள் வட தமிழகத்தில் பெரும் தோல்வியை அதிமுக – பாமக கூட்டணி சந்திக்கும்.
இதனை அறிந்துள்ள ஆட்சியாளர்கள், வேல்முருகனை தேர்தல் களத்தில் இறங்க விடாமல் தடுக்க, பழைய வழக்கு ஒன்றில் கைது செய்து அதன் வழியாக குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கவும், முந்தைய வன்னியர் தலைவர்களுக்கு ஏற்பட்ட நிலைமையை வேல்முருகனுக்கும் உருவாக்கவும் திட்டமிடுவதாக தகவல்கள் வருகின்றன‘’ என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.