ADVERTISEMENT

பழிவாங்கப்படுகிறாரா வீரபாண்டி ராஜா? -கொந்தளிக்கும் ஆதரவாளர்கள் ! 

12:23 PM Feb 10, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்த வீரபாண்டி ஆ.ராஜாவை அப்பொறுப்பிலிருந்து தூக்கியது திமுக தலைமை! சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பார்த்த வெற்றியை வீரபாண்டி ராஜாவால் பெற்றுத்தர முடியவில்லை என்கிற குற்றாச்சாட்டுகளின் அடிப்படையிலேயே அவரது பதவி பறிக்கப்பட்டது என திமுக தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால், ’’ இது உண்மையான காரணம் இல்லை ‘’ என கொந்தளிக்கிறார்கள் சேலம் மாவட்ட உடன்பிறப்புகள்.



உள்ளாட்சித் தேர்தலின் வெற்றி-தோல்வி குறித்து விவாதிக்க கட்சியின் செயற்குழு கூட்டத்தை சமீபத்தில் கூட்டியிருந்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அப்போது மாவட்ட செயலாளர்கள், பொருப்பாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் என பலரும் தேர்தல் குறித்துப் பேசினார்கள். குற்றச்சாட்டுகளும் ஆதங்கங்களும் எதிரொலித்தன. அந்த வகையில், தனது மாவட்டம் குறித்து சில பல விளக்கங்களை சுட்டிக்காட்டிப் பேசினார் வீரபாண்டி ஆ.ராஜா. அதுதான் அவரது பதவி பறிப்புக்கு காரணம் என சொல்லப்பட்டு வரும் சூழலில், இது குறித்து செயற்குழுவில் கலந்துகொண்ட சேலம் மாவட்ட உடன்பிறப்புகளிடம் நாம் பேசினோம்.

நம்மிடம் பேசிய அவர்கள், ‘’ தேர்தல் தோல்வியை காரணம் காட்டியே வீரபாண்டி ராஜாவின் பதவி பறிக்கப்பட்டது என்கிற காரணம் உண்மை கிடையாது. அவரது மாவட்டத்தில் கணிசமான வெற்றியை அவர் வாங்கித்தந்திருக்கிறார். இதை விவரித்து செயற்குழுவில் பேசிய வீரபாண்டி ராஜா, ’ என் மாவட்டத்தில் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் எல்லோருமே தலைமையால் நியமிக்கப்பட்டவர்கள்தான். என்னால் நியமிக்கப்பட்டவர்கள் கிடையாது. அதனாலேயே என் கட்டுப்பாட்டில் அவர்கள் இல்லை. இருப்பினும் அவர்களை வைத்துத்தான் கட்சி பணிகளை செய்து வந்திருக்கிறேன். தேர்தல் நேரத்தில் அவர்கள் எனக்கு ஒத்துழைப்பு தரவே இல்லை. இது குறித்து கட்சியின் அமைப்புச் செயலாளரிடம் ( ஆர்.எஸ்.பாரதி ) பல முறை சொல்லியிருக்கிறேன். தலைமைக்கு கொண்டு போவதாகச் சொன்னார்கள். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தேர்தல் நெருங்க நெருங்க பல சங்கடங்களை சந்தித்தேன். அப்படியிருந்தும் தேர்தலில் இந்தளவுக்கு வெற்றியை தேடித்தந்திருக்கிறேன். மாவட்டத்தில் எனக்கு ஒத்துழைப்பு கிடைத்திருந்தால் தலைமை எதிர்பார்த்த வெற்றியை தந்திருக்க முடியும் ‘ என தனது ஆதங்கத்தைக் கொட்டினார்.


தலைமையால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் சரி இல்லை என உண்மையை அவர் வெளிப்படுத்தியிருந்தாலும், தலைமை மீதே குற்றச்சாட்டு வைக்கும் தொணி அவரது பேச்சில் இருந்தது. ஏற்கனவே வீரபாண்டியார் குடும்பம் என்றாலே தலைமைக்கும் அவரை சுற்றியுள்ள சிலருக்கும் எட்டிக்காயாக கசக்கும். அப்படியிருக்கும் நிலையில், தங்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளை தலைமை ரசிக்கவில்லை. அதனாலேயே மாவட்ட பொறுப்பிலிருந்து அவரை நீக்கிவிட்டனர். இதுதான் நிஜ காரணமே தவிர, அவரது பதவி பறிக்கப்பட்டதற்கு தேர்தல் தோல்வி காரணம் அல்ல. தேர்தல் தோல்விதான் காரணமென்றால், அதிமுகவுடன் கைக்கோர்த்துக்கொண்டு திமுக தோல்விக்கு காரணமான பல மா.செ.க்களுக்கு கல்தா கொடுத்திருக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லையே ! அதனால், பழிவாங்கப்பட்டிருக்கிறார் வீரபாண்டி ராஜா ! ‘’ என்று கொந்தளிக்கிறார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT