ADVERTISEMENT

“பா.ஜ.க.வுடன் அ.ம.மு.க. கூட்டணி” - டி.டி.வி. தினகரன் உறுதி

06:15 PM Mar 11, 2024 | prabukumar@nak…

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன.

ADVERTISEMENT

இதற்கிடையே பா.ஜ.க. கூட்டணியில் டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. இணைய இருப்பதாகவும், அதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், திருச்சியில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “கூட்டணி தொடர்பாக பா.ஜ.க.விடம் கடந்த 6 மாதங்களாக பேசிக் கொண்டிருக்கிறோம். எனவே பா.ஜ.க.வுடன் - அ.ம.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது.

ADVERTISEMENT

பா.ஜ.க. கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவை அ.ம.மு.க. அளிக்கும். எந்த உறுத்தலும் இல்லாமல் பா.ஜ.க.வுடன் அ.ம.மு.க. கூட்டணி அமைக்கிறது. எங்களது கோரிக்கைகளை ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக கொடுத்துவிட்டோம். பா.ஜ.க.வின் வெற்றிக்கு அணில் போல உதவியாக இருப்போம். தாமரை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று பா.ஜ.க., அ.ம.மு.க.வை நிர்ப்பந்திக்கவில்லை. எத்தனை தொகுதி, எந்தெந்த தொகுதி என்பது குறித்து எல்லாம் பிரச்சனை கிடையாது. எங்களின் தேவை என்ன என்பது பா.ஜ.க.வுக்கு தெரியும்” எனத் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT