ADVERTISEMENT

எந்தெந்த தொகுதிகளில் ம.தி.மு.க. போட்டி? - கையெழுத்தானது தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம்!

09:00 PM Mar 10, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை மறுநாள் (12/03/2021) தொடங்க உள்ள நிலையில், அ.தி.மு.க. சார்பில், 171 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சித் தலைமை வெளியிட்டுள்ளது. அதேபோல், மக்கள் நீதி மய்யம் 70 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. மேலும், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள பா.ஜ.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தி.மு.க. தலைமை தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், அந்த கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அதன், தொடர்ச்சியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு கடையநல்லூர், வாணியம்பாடி, சிதம்பரம் ஆகிய மூன்று தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தானது.


அதனைத் தொடர்ந்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. குழுவுடன் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையிலான நிர்வாகிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், தொகுதிகள் முடிவு செய்யப்பட்டு தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் கையெழுத்திட்டனர். அதன்படி, மதுரை (தெற்கு), வாசுதேவநல்லூர், சாத்தூர், பல்லடம், அரியலூர், மதுராந்தகம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க. போட்டியிடுகிறது. ம.தி.மு.க. போட்டியிடும் 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், தி.மு.க. கூட்டணியில் உள்ள ஆதித் தமிழர் பேரவைக்கு அவிநாசி சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஆதித் தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான், "எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அவிநாசி சட்டமன்றத் தொகுதியில் நானே போட்டியிடுகிறேன்" என்றார்.

மேலும், தி.மு.க. கூட்டணியில் உள்ள மக்கள் விடுதலைக் கட்சிக்கு நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT