
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே அரசியல் கட்சிகள் பிரச்சாரம், கூட்டணி என பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் (26/2/2021) சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல், வாக்கெடுப்பு, வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடைமுறைகளும் அமலுக்கு வந்தது. தற்பொழுது அரசியல் கட்சிகள் கூட்டணிக்கான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன.
திமுக, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆயத்தமாகி உள்ளது. அதற்கான அறிவிப்பை திமுக தலைமை வெளியிட்டுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுடன் திமுக தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறது. இன்று மாலை 5 மணிக்கு கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வருமாறு இந்த இரண்டு கட்சிகளுக்கும் திமுக அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் நாளை திமுகவின் மற்ற இரு கூட்டணிக் கட்சிகளான மதிமுக, விசிகவிற்கு கூட்டணி தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது. டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினருடன் மதிமுகவின் வைகோ, விசிகவின் திருமாவளவன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்துவர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.