ADVERTISEMENT

மு.க.ஸ்டாலினுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் தெரிந்தது எல்லாம்... சீமான் பேச்சு 

02:59 PM May 13, 2019 | rajavel

ADVERTISEMENT

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரேவதியை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளாச்சேரியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

ADVERTISEMENT



கட்சிக்கு எவ்வளவு தருவார்கள், சீட்டுக்கு எவ்வளவு தருவார்கள் என்று பார்த்து தான் சில கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்துவார்கள். கல்லூரிக்கு செல்லும் பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்கள், கடைக்கு செல்லும் பெண்கள் மீண்டும் வீட்டிற்கு வருவார்களா? என்ற அச்சத்துடனே பெற்றோர்கள் உள்ளனர். பெண்கள் இரவில் வெளியே சென்று, வீட்டிற்கு திரும்பும் நிலை இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் உள்ளதா?

நாட்டில் சந்தன மரம் வெட்டியவன் காட்டில் என்றால், வாங்கியவன் எங்கே? அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனரா? நாட்டில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும். இல்லையென்றால் பாரத மாதாவுக்கு ஜே என்ற கோஷத்தை கைவிட வேண்டும். பெண்மையை காப்பது தான் உண்மையான ஆண்மை. இந்திய தலைவர்களின் பிள்ளைகள் யாராவது நாட்டை காக்க ராணுவத்தில் உள்ளார்களா?

தேர்தல் என்பது திருவிழா போன்று மாறிவிட்டது. இடைத்தேர்தல் என்றால் அனைத்து அமைச்சர்களும் வந்து ஓட்டுக்கு எவ்வளவு பணம் கொடுப்பது என்று தான் செயல்படுகின்றனர். இவர்கள் எப்படி மக்களுக்கு தரமான சாலை, குடிநீர், அடிப்படை தேவைகள் அறிந்து செயல்படுவார்கள். தேர்தலுக்கு தேர்தல் மக்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கலாம் என்று தான் சிந்தித்து வருகின்றனர்.

நாட்டையும், வீட்டையும் பாதுகாப்பது தான் உண்மையான வீரம். குடிநீருக்கு பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படாததால் குடிநீருக்காக மூன்றாம் உலகப் போர் விரைவில் நடக்க போகிறது. தொழில் வளர்ச்சியை மட்டுமே முன்னெடுத்துச் சென்ற நாட்டின் நிலை, தற்போது என்ன ஆகிவிட்டது? தொழில் வளர்ச்சி மட்டுமே நாட்டை வளர்ச்சியடைய வைக்காது.

ராமநாதபுரத்தில் தற்போது ஒரு குடம் தண்ணீர் ரூ.50 என்றாலும், கொடுக்க அங்கே தண்ணீர் இல்லை. தற்சார்பு, பசுமை பொருளாதாரம் என்றால் என்ன? என்று மு.க.ஸ்டாலினுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியாது. அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் கேபிள் டி.வி. கட்டணம் மட்டுமே. இவ்வாறு கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT