ADVERTISEMENT

வேங்கைவயல்; “தனி நீர்த்தேக்கத் தொட்டி வேண்டாம்” - தொல். திருமாவளவன்

04:03 PM Jan 19, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக அச்செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டி வள்ளுவர்கோட்டத்தில் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக முதல்வர் நேரடியாக கவனம் செலுத்தி விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

முக்கியமாக இதில் சில கோரிக்கைகளை நாங்கள் முன்வைக்கிறோம். வேங்கைவயல் கிராமத்தில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிக்கப்பட வேண்டும். அதை சுத்தம் செய்து மறுபடியும் பயன்பாட்டுக்கு கொண்டு வரக்கூடாது. புதிதாக அங்கே அவர்களுக்கு என்று தனியாக குடிநீர் தொட்டியையும் அமைக்கக்கூடாது. ஏற்கனவே பொதுவான குடிநீர்த் தொட்டியில் இருந்து அவர்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டது. அதையே மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது விடுதலைச் சிறுத்தைகளின் முதன்மையான கோரிக்கை.

இரட்டைக் குவளை முறை அந்த கிராமத்தில் மட்டுமல்ல தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கிராமங்களில் இன்னும் நடைமுறையில் இருக்கிறது என்பதை அண்மையில் வெளியான புள்ளி விவரம் கூறுகிறது. இந்தியாவிலேயே அதிகம் தீண்டாமை கொடுமைகள் நடந்தேறக்கூடிய மாநிலங்களில் தமிழ்நாடு முதல் 10 மாநிலங்களுக்குள் இடம் பெற்று இருக்கிறது. இந்த அளவிற்கு தமிழ்நாட்டில் இன்னும் சாதிய வன்கொடுமைகள் தலைவிரித்து ஆடுவது மிகுந்த கவலை அளிக்கிறது. வேதனை அளிக்கிறது.

இது உண்மையான கண்டனத்திற்கு உரியது. அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இரட்டைக் குவளை முறையை முற்றாக ஒழிப்பதற்கு சிறப்பு படை பிரிவை உருவாக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் எந்தெந்த கிராமங்களில் இன்னும் இரட்டைக் குவளை முறை நடைமுறையில் இருக்கிறது என்பதைக் கண்டறிய வேண்டும். தனியார் நிறுவனங்கள் சர்வே செய்து புள்ளி விவரங்களை வெளியிடுகின்றன. தமிழக அரசே நேரடியாக களத்தில் இறங்கி எங்கெல்லாம் இரட்டைக் குவளை முறை இருக்கிறது என்பதைக் கண்டறிந்து அவர்களுக்கு உரிய ஆணை பிறப்பித்து எச்சரிக்கை விடுவித்து அவற்றை ஒழிக்க முன்வர வேண்டும்” எனக் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT