Thirumavalavan protest against BJP

தமிழ்நாட்டில் பாஜக சட்டம் - ஒழுங்கை சீர்குலைத்துமாநிலத்தின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்கு முயல்வதாகக் கூறி ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.

Advertisment

இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து அதனைச் செயல்பட விடாமல் முடக்குவதற்குதமிழ்நாட்டில் திட்டமிட்ட முறையில் பாஜகவும் அதன் துணை அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. மத அடிப்படையில் வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதோடு சாதி வெறியையும் ஊக்கப்படுத்தி வருகின்றன. தனிநபர்களுக்கு எதிராகத் தரங்கெட்டுப் பேசுவது, வீம்புக்கு வம்பிழுக்கும் வகையில் வேண்டுமென்றே அரசியல் தலைவர்களுக்கு எதிராக அவதூறுகள் பரப்புவது; ஆத்திரமூட்டும் வகையில் ஆபாசமான விமர்சனங்களின் மூலம் இழிவுபடுத்துவது; தாங்களே தங்களுக்கு எதிராகபெட்ரோல் குண்டுகளை வீசிக்கொண்டு வன்முறைகளைத் தூண்டும் வகையில் நாடகமாடுவது; கூலிப்படையினரை ஏவி கொலைகள் செய்வது; ஊடகத்தினரை மிரட்டுவது; சமூக ஊடகங்களில் பொய்ச் செய்திகளைப் பரப்பி சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்துவது என அவர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

Advertisment

இத்தகைய மக்கள் விரோதப் போக்குகளுக்கு தமிழ்நாடு ஆளுநரும் துணையாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அத்துடன், அவரது நடவடிக்கைகள் சனாதன சக்திகளின் வன்முறைப் போக்குகளுக்கு இந்திய ஒன்றிய அரசின் மறைமுகமான ஆதரவும் இருக்கிறது எனக் காட்டுகிறது.

மேலும், சமூக விரோதிகளின் துணையோடு எதிர்க்கட்சியினரை மட்டுமின்றி சொந்த கட்சிக்காரர்களையே அவதூறுகளின் மூலம் அச்சுறுத்துவது என்பதை பாஜகவினர் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். குறிப்பாக, அந்தக் கட்சியில் இருக்கும் பெண்களையே வெளிப்படையாக 'ப்ளாக் மெயில்' செய்கின்றனர். இத்தகைய சமூகவிரோத மற்றும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்களை ஊக்குவிக்கும் ஆளுநர், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்தவும் தொடர்ந்து முயற்சித்து வருகிறார். குறிப்பாக, தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்று ஆளுநர் உரையில் இடம் பெற்றிருந்த வாசகத்தைப் படிக்க மறுத்த ஆளுநர், இன்றும் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து திமுக அரசுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

Advertisment

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் கடமையைச் செய்யாமல், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்வதுபோல அவரது பேச்சுகளும் அறிக்கைகளும் உள்ளன. இவை எல்லாமே வட மாநிலங்களில் செய்வதைப் போல தமிழ்நாட்டிலும் செய்து இதனை ஒரு கலவர பூமியாக மாற்றும் சதித்திட்டத்தோடு செய்யப்படுகின்றன. சனாதனப் பயங்கரவாதிகளின் இத்தகைய சதியை முறியடித்து தமிழ்நாட்டில் சமூக அமைதியையும் சமய நல்லிணக்கத்தையும் காப்பாற்ற வேண்டிய கடமை சனநாயக சக்திகளான நம் அனைவருக்கும் உள்ளது.

அதனடிப்படையில் தான் சனாதன சக்திகளுக்கு எதிராக இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தீர்மானித்துள்ளது. எனவே, பிப்ரவரி 28-ஆம் நாள் சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைக்கும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சனநாயக சக்திகள் திரளாகப் பங்கேற்க வேண்டுமாறு அழைப்பு விடுக்கிறோம்” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.