ADVERTISEMENT

கோடிக்கணக்கான பெண்களின் உணர்வை தமிழக அரசு மதிக்க வேண்டும்... மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்!

06:38 PM May 15, 2020 | rajavel



கோடிக்கணக்கான பெண்களின் உணர்வையும், அரசியல் கட்சிகளின் கருத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு டாஸ்மாக் கடைகளை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT


இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்றும், ஆன்லைன் மூலமாக மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அளித்திருந்த உத்தரவுக்கு இன்று உச்சநீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது. இது மிகுந்த ஏமாற்றத்தையும், வேதனையையும் அளிப்பதாக உள்ளது. மேலும், தமிழகத்தின் சமூக நிலைமையையும், பெண்களின் உணர்வையும் கணக்கில் எடுத்து வழங்கப்பட்டதாக இத்தீர்ப்பு அமையவில்லை.

இந்தியாவில் கரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலத்துக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் தமிழகம் இருக்கிறது. மதுபானக் கடைகள் திறப்பும், வியாபாரமும் நோய்த்தொற்றை நிச்சயமாக அதிகப்படுத்தும். தனிமனித விலகல் காற்றில் பறக்கவிடப்படும். இது காசு கொடுத்து சூனியம் வைத்துக் கொள்வதற்கு ஒப்பாகும்.


மக்களை பாதிக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கும், மாநில உரிமைகள் பாதிக்கப்படுவதற்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தை அணுகுவதற்கும், மத்திய அரசோடு போராடுவதற்கும் முன்வராத தமிழக அரசு, ஏழைக் குடும்பங்களை சீரழித்து அரசு வருவாயை பெருக்கும் இந்தப் பிரச்சனைக்கு மட்டும் மின்னல் வேகத்தில் உச்சநீதிமன்றத்தை அணுகியது. இது ஒருபுறம் இருக்க மாநில உரிமைகள் குறித்து கவலைப்படாமல் மோடி அரசுக்கு துதிபாடும் போக்கையும், ஏழை குடும்பங்களைப் பற்றி கிஞ்சிற்றும் அக்கறையின்றி சொற்ப நிவாரணத் தொகையையும் வழங்கிவிட்டு, தற்போது அதை மதுபான விற்பனை மூலம் பறித்துக் கொள்ளும் அநீதியையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இந்த நடவடிக்கையானது குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான பல்வேறு வகையான குற்றங்களை அதிகரிக்கும். ஏழைக் குடும்பங்களை மேலும் பட்டினியில் ஆழ்த்தும். ஏற்கனவே இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் இந்திய மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பட்டினியில் தள்ளப்படும் போக்கை சுட்டிக் காட்டியிருக்கிறது. இந்த ஆபத்து மேலும் அதிகரிக்கும், ஆழமாகும். மதுபான கடைகளில் வரும் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் கட்டாயம் ஏற்படுவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் காவல்துறையின் கவனம் குறைவதற்கான வாய்ப்பு ஏற்படும், தேவையற்ற வேலைப்பளுவை அவர்கள் மீது சுமத்தும்.



டாஸ்மாக் கடைகளில் கூடுதல் நெரிசலில் மக்கள் அங்கேயே நின்று குடிப்பதை தடுப்பது சாத்தியமே அல்ல. டீக்கடைகளில் கூட பார்சல் மட்டும்தான் என்று எச்சரிக்கையாக அறிவிக்கும் அரசு, இதில் தாராளமாக இருப்பது பொருத்தமற்ற செயல் ஆகும்.


இச்சூழலில், தமிழக அரசு செய்த மேல்முறையீட்டில் கிடைத்த உத்தரவாக இருந்தாலும், தமிழகத்தின் கள நிலைமையையும், கோடிக்கணக்கான பெண்களின் உணர்வையும், அரசியல் கட்சிகளின் கருத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு டாஸ்மாக் கடைகளை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது''. இவ்வாறு கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT