
கரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகள் நாளை (14/06/2021) முதல் அமலுக்கு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நாளை (14/06/2021) முதல் 'டாஸ்மாக்' மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. இந்த நிலையில், 'டாஸ்மாக்' கடைகள் செயல்படுவதற்கான கட்டுப்பாடுகளை 'டாஸ்மாக்' நிறுவனம் அறிவித்துள்ளது.
ஒரே நேரத்தில் 5 நபா்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது. சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும். ஒரு அடி சுற்றளவு கொண்ட வட்டத்தினை தடுப்பு வேலிக்குள் வரைய வேண்டும். கடைகள் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும். பணியாளா்கள் கட்டாயம் மூன்றடுக்கு முகக்கவசம் அணிய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகள் நாளை திறக்கவிருக்கும் நிலையில், மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும், அந்தந்த டாஸ்மாக் கடைகளின் பணியாளர்கள் செய்துள்ளனர். மேலும் மதுபானங்களை வாங்க மதுப்பிரியர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.