ADVERTISEMENT

“விளையாட்டு துறைக்கு சரியான இளைஞர் கிடைத்துள்ளார்” - சபாநாயகர் அப்பாவு

12:03 PM Dec 15, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் நேற்று காலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அமைச்சராகப் பொறுப்பேற்றார். இவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், சபாநாயகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, “இளைஞர் நலத்துறைக்கு அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்று இருப்பதால் இளைஞர்கள், மாணவர்களை சர்வதேச தரத்தில் கொண்டு வரும் வாய்ப்பு அமைந்துள்ளது. விளையாட்டுத் துறையில் மாணவ மாணவிகளை மேம்படுத்தும் வகையில் அவர் நிச்சயம் செயல்படுவார்.

ரூ. 600 கோடி அளவில் சென்னையில் சர்வதேச அளவிலான விளையாட்டு மைதானத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிறுவ இருக்கிறார். விளையாட்டுத் துறையை முன்னேற்றும் திட்டங்களை இந்த அரசு மிகுந்த கவனத்தோடு செயல்படுத்தி வருகிறது. அதற்கு அமைச்சராக சரியான இளைஞர் கிடைத்துள்ளார்.

வாரிசு அரசியல் பற்றி கேட்டால், கலைஞர் முதலமைச்சராகப் பதவி ஏற்கும்போது அண்ணா ஆட்சி போல இருக்காது எனக் கூறினார்கள். அதன்பின் கலைஞர் மறைவுக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பதவி ஏற்கும்போதும் வாரிசு அரசியல் என்றுதான் சொன்னார்கள். இந்த இளம் வயதில் தனது குடும்ப வாழ்க்கையில் பல சந்தோஷங்கள், கனவுகளை விட்டுவிட்டு நாட்டுக்காக ஒருவர் உழைப்பதற்கு முன்வந்திருப்பது பெருமைக்குரியது. ஆகையால் இதனைக் குறுகிய வட்டத்தில் பார்க்க வேண்டாம்” எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT