Skip to main content

கலைஞருக்காக சிறை; உதயநிதிக்காக செலவு - முதல்வருக்கு கடைநிலை தொண்டன் வைத்த கோரிக்கை

Published on 17/12/2022 | Edited on 17/12/2022

 

dmk member request to the chief minister cm stalin
தன்னரசு

 

தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கியிருப்பது அரசியல் களத்தில் குறிப்பாக எதிர்க்கட்சியான அ.தி.மு.கவும், பா.ஜ.க.வும் அதை விவாதப் பொருளாக மாற்றியுள்ளது. ‘மகனுக்கு முடிசூட்டும் விழா... உதயநிதி அமைச்சரானால் என்ன பாலாறும்... தேனாறுமா தமிழகத்தில் ஓடப் போகிறது...? அப்பட்டமான வாரிசு அரசியல்..’ என  அ.தி.மு.க.எடப்பாடி பழனிசாமி விமர்சித்து வருகிறார். 

 

கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என தி.மு.க.வின் ஒவ்வொரு மாவட்ட கழகமும் தீர்மானம் இயற்றியுள்ளது. அதேபோல் மூத்த நிர்வாகிகள் முதல் கடைநிலை தொண்டன் வரை அவர் அமைச்சர் ஆவதை வரவேற்பதைக் காண முடிந்தது.

 

உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்ததைக் கட்சி தொண்டர்கள் அவர்கள் வீட்டில் நடந்த ஒரு நல்ல நிகழ்வாகக் கொண்டாடியுள்ளனர். அமைச்சர் பதவி ஏற்ற அந்த 14 ந் தேதி ஈரோட்டில் ஒரு சவரத் தொழிலாளி தனது சலூன் கடைக்கு வந்த அனைவருக்கும் தனது சொந்த செலவில் இலவசமாக முடித்திருத்தம் மற்றும் சவரம் செய்து அசத்தியுள்ளார்.

 

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே வெள்ளோட்டாம்பரப்பு பேரூராட்சிக்குட்பட்ட நடுப்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் 58 வயதான தன்னரசு. இவரது மனைவி ஜோதிமணி, இவர்களுக்கு மோகனசுந்தரம், திருநாவுக்கரசு என்ற இரண்டு மகன்கள். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. தன்னரசு  தி.மு.க.வின் தீவிர தொண்டர். சென்ற நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நடுப்பாளையம் என்ற அந்த கிராமத்தில் சலூன் கடை நடத்தி வருகிறார். உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கியுள்ளதைக் கொண்டாடும் வகையில் அமைச்சர் பதவி ஏற்பு நாளில் தனது சலூன் கடைக்கு வரும் அனைவருக்கும் இலவசமாக முடித்திருத்தம் மற்றும் சவரம் செய்வதாக முன்னதாகவே சுற்றுவட்டார கிராமங்கள் வரை அறிவிப்பு செய்திருந்தார் தன்னரசு.

 

இதுகுறித்து தன்னரசு கூறும்போது, “நான் 40 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவில் உள்ளேன். அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோரை குருவாக நேசிக்கிறேன். 1989ல் கலைஞர் ஆட்சியைக் கலைத்தபோது போராட்டம் நடத்தி சிறைக்குச் சென்றுள்ளேன். சட்டமன்ற தேர்தலில் எனது இரு மகன்கள் மற்றும் இரண்டு மருமகள் என நான்கு பேருக்கும் மொடக்குறிச்சி தொகுதியில் சீட் கேட்டு பணம் கட்டினேன். போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்து பணம் கட்டவில்லை. நேர்காணலில் தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேச வாய்ப்பு கிடைக்கும் என்பதற்காகத்தான் பணம் கட்டினேன். அதுபோல தளபதியை நேரில் சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது அதுவே எனக்கு போதும்.

 

dmk member request to the chief minister cm stalin

 

இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்குவதாக அறிவிப்பு வந்தவுடன் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்கும் நாளில் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என விரும்பினேன். ஆனால் ஒரு சவரத் தொழிலாளியான என்னால் என்ன செய்ய முடியும்? எனது சலூன் கடைக்கு வரும் அனைவருக்கும் இலவசமாக முடித்திருத்தம் மற்றும் சவரம் செய்ய முடிவு செய்தேன். அதற்காக மேலும் மூன்று சவரத் தொழிலாளர்களை அன்றைய தினம் பணியில் அமர்த்தி என்னோடு நான்கு பேர், காலை 6 மணி முதல் மாலை 6 வரை கடைக்கு வந்த அனைவருக்கும் கட்டிங், சேவிங் செய்தோம். நூற்றி இருபதுக்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாக செய்து கொடுத்துள்ளேன். அதுவே எனக்கு மகிழ்ச்சியாக அமைந்துள்ளது. மேலும் ஒரு தி.மு.க. தொண்டனாக எனது இன்னொரு விருப்பம், முதல்வர் தளபதிக்கு நான் வைக்கும் கோரிக்கை ஒன்றுதான். உதயநிதி அவர்களுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும்” என அளவில்லா மகிழ்ச்சியுடன் நம்மிடம் பேசினார் தன்னரசு.

 

 

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்