ADVERTISEMENT

“விஷம் கொடுத்து கொல்பவர்களும் உள்ளனர்” - பா.ஜ.கவை கடுமையாக விமர்சித்த செல்லூர் ராஜு

05:48 PM Mar 02, 2024 | mathi23

இரண்டு நாள் சுற்றுப் பயணமாகத் தமிழகம் வந்திருக்கும் பிரதமர் மோடி, கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பா.ஜ.க. நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதனையடுத்து இரண்டாவது நாளாக தூத்துக்குடியில் நடைபெற்ற பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

ADVERTISEMENT

அந்த வகையில் பல்லடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வணக்கம் எனக் கூறி பேசுகையில், “தமிழ் மொழி மிகவும் பழமையானது. பல்வேறு சிறப்புகளை கொண்டது. தமிழகத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட செங்கோல் நாடாளுமன்றத்தை அலங்கரிக்கிறது. கடந்த 1991இல் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு இடையில் காஷ்மீரில் தேசியக்கொடியை ஏற்றினோம். நல்லாட்சியை நடத்தி தமிழகத்திற்கு கல்வி, சுகாதாரத்தை எம்.ஜி.ஆர். கொடுத்துள்ளார். குடும்ப அரசியல் நடத்தி எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வரவில்லை. எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதாதான் தமிழகத்தில் சிறந்த ஆட்சியை கொடுத்தார். ஜெயலலிதா தனது வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக பணியாற்றினார். என் மீது அன்பு கொண்டவர்கள் தமிழக மக்கள். பாஜகவின் இதயத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

ADVERTISEMENT

கடந்த 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கூட்டணியில் திமுக அங்கம் வகித்தபோது தமிழகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை. தமிழகம் தேசியத்தின் பக்கம் நிற்பதை இங்கு கூடியுள்ள மக்கள் மூலம் தெரிகிறது. 2024 தேர்தலில் தமிழகத்தில் அரசியல் திருப்பம் ஏற்படும். ஒவ்வொரு பாஜக தொண்டரும் தேசமே பிரதானம் என கருதி உழைக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். மேலும் தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், மதுரையில் அதிமுக வழக்கறிஞர்கள் பிரிவு ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்டு பிரதமர் மோடியையும் பா.ஜ.க.வையும் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். அதில் அவர், “வெல்லம் கொடுத்து கொல்பவர்களும் இருக்கிறார்கள். விஷம் கொடுத்து கொல்பவர்களும் இருக்கிறார்கள். அதிமுக தலைவர்களை உயர்த்தி பேசினால் பா.ஜ.க.வுக்கு வாக்கு கிடைக்கும் என பிரதமரே நினைக்கிறார். பா.ஜ.க கார்ப்பரேட் கம்பெனிகளுக்கானது. ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் விலைவாசி உயர்வு விண்ணை எட்டியுள்ளது.

பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 15 லட்சம் கொடுப்போம் என்று பிரதமர் கூறினார். வேலைவாய்ப்பு தருவோம் என்று கூறினார்கள். ஆனால் பா.ஜ.க எதுவுமே செய்யவில்லை. தமிழ்நாட்டில் மழை வெள்ள பாதிப்புக்கு நிவாரணம் தர ஒன்றிய அரசுக்கு மனமில்லை. தமிழ்நாட்டின் வளர்ச்சியை தேசியக் கட்சிகள் புறக்கணிக்கின்றன. தமிழர் உரிமை, மொழிதான் முக்கியம் என்று பா.ஜ.க கூட்டணியை முறித்து தைரியமாக எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்துள்ளார்” என்று பேசினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT