ADVERTISEMENT

“400 கோடி திமுகவிடம் வாங்கியவர் 4 ரூபாய் கூட என்னிடம் வாங்காமல் நாடு முழுவதும் தெரியப்படுத்தியுள்ளார்” - சீமான்

07:35 AM Mar 15, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிரபல தேர்தல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் வடமாநிலத் தொழிலாளர்கள் விவகாரத்தில் சீமான் பேசிய காணொளி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த காணொளியில் சீமான், “நான் ஆட்சிக்கு வந்த ஒரு வாரத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் அனைவரும் பெட்டியைக் கட்டிக்கொண்டு போய்விடுவார்கள். எத்தனை பேரை எங்கு வச்சி வெளுப்பேன் என்று தெரியாது. கஞ்சா வைத்திருந்தார்கள், பாலியல் தொல்லை போன்ற வழக்குகளில் ஆயிரம் பேரை உள்ளே தூக்கிப்போட்டு அவர்களுக்கு சோறு போடாதீர்கள் என்று கூறி உள்ளே வைத்து பிச்சிவிட்டேன் என்றால் அவர்களாகவே தமிழ்நாட்டை விட்டுக் கிளம்பி விடுவார்கள்” எனக் கூறியிருந்தார். பிரசாந்த் கிஷோர் பகிர்ந்த காணொளி சமூக வலைதளங்களில் பேசு பொருளானது. தொடர்ந்து சீமான் மீது 153(B)(c), 505(1)(c), 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் என்.எல்.சி நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “வட இந்தியர்கள், இந்திக்காரர்கள் அதிகமாக தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள். அதை முறைப்படுத்துங்கள் என்று தான் நான் பேசினேன். பிரசாந்த் உங்களை நான் பாராட்டுகிறேன். நீங்கள் பீகாரி. பீகாரிக்கு உண்மையாக இருக்கிறீர்கள். நான் தமிழன். அதுபோல் என் இனத்திற்கு உண்மையாக இருக்கிறேன். நீங்கள் இப்படிப் பேசினால் கர்நாடகத்தில் இருக்கும் தமிழர்களை, ஆந்திராவில் இருக்கும் தமிழர்களை அடித்தால் என்ன செய்வீர்கள் எனக் கேட்பார்கள். அவர்கள் இதற்கு முன் அடித்தபோது என்ன செய்தீர்கள்? என்னை அச்சுறுத்தாதீர்கள். நீங்கள் தொட்டால் நானும் தொடுவேன்.

அவர்கள் ஒன்றேகால் கோடி பேருக்கும் மேல் இங்கு குடிபெயர்ந்துள்ளார்கள். நாம் சிறுக சிறுக நம் வேலைவாய்ப்பை இழப்பது மட்டுமல்ல. இன்று கூலியாக உள்ளவர்கள் நாளைய முதலாளியாக மாறுவார்கள். நிலம் அவர்கள் கையில் போகும். நாம் நிலமற்ற அடிமைகளாவோம். இவை அனைத்தும் வரலாற்றெங்கிலும் நிகழ்ந்துள்ளது. அதை பார்க்கும்போது நமக்கு பயம் வருகிறது. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நினைக்கிறோம்.

வட இந்தியர்கள் வருகையை முறைப்படுத்துங்கள். அப்பொழுதுதான் அவர்களைக் கண்காணிக்க முடியும். நேற்று மீனவர்கள் கைதான போது, வயிற்றுப்பசிக்கு தானே வந்தார்கள், ஏன் கைது செய்தீர்கள் என யாரும் கேட்கவில்லையே. நான் அடிவாங்கும் பொழுது நன்முறையாக உள்ளது, மற்றவர்கள் அடிவாங்கும் போது உங்களுக்கு ஏன் வன்முறையாகத் தெரிகிறது. உடனே வன்முறையைத் தூண்டுகிறார். இரு இனங்கள் இடையே பகையைத் தூண்டுகிறார் என வழக்கு போடுகிறார்கள். ரூ. 400 கோடி வாங்கிவிட்டு திமுகவிற்கு வேலை செய்தவர் எனக்கு 4 ரூபாய் கூட வாங்காமல் இந்தியா முழுவதும் சீமான் என்ற ஒருவர் இருக்கிறார் எனத் தெரியப்படுத்தியுள்ளார். இதற்காகவே பிரசாந்த் கிஷோருக்கு நன்றி சொல்ல வேண்டும்.” எனப் பேசியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT