Skip to main content

"விஜய் சூப்பர் ஸ்டாராக இருப்பதற்கு எது காரணம்" - சீமான் விளக்கம்

Published on 07/01/2023 | Edited on 07/01/2023

 

seeman speak about vijay in irumban audio launch

 

எம்.ஜி.ஆரின் பேரன் ராமச்சந்திரன் என்கிற ஜூனியர் எம்.ஜி.ஆர் நடிப்பில் கீரா இயக்கத்தில் உருவாகியுள்ளது  'இரும்பன்'. ஐஸ்வர்யா தத்தா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (06.01.2023) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினர். 

 

சீமான் பேசுகையில், "எம்.ஜி.ஆருக்கு ஒரு வரலாறு உண்டு. அதை படித்தால் வலிக்கும். அப்படி கஷ்டப்பட்டு வந்ததால் தான் புகழ் பெற்று இன்றும் பேசப்படுகிறார்.அவரை போல் சண்டை காட்சியில் நடிப்பதற்கு இப்போது எந்த நடிகர்களும் இல்லை. அவருடைய பேரன்  ஜுனியர் எம்.ஜி. ஆர்   சினிமாவுக்கு வந்திருக்கிறார். இதனை மக்கள், ஜூனியர் என்.டி.ஆரை போல  ஜுனியர் எம்.ஜி. ஆர் வந்திருக்கிறார் என்று தான் பார்ப்பார்கள். ஜூனியர் என்.டி.ஆர் வந்ததற்கு அவங்க அப்பா, சித்தப்பா மற்றும் அரசியல் பின்புலன்கள் காரணமாக இருந்தது. ஆனால் அதன் பிறகு அவர் இன்று பெரிய நடிகராக இருப்பது அவருடைய திறமை. 

 

அதே போல என் தம்பி விஜய்க்கு அவருடைய அப்பா சந்திரசேகர் காரணம். அவர் உதவியிருக்கிறார். ஆனால் இன்று தமிழ் திரையுலகில் உயர்ந்த  நட்சத்திரமாக சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். அதற்கு விஜய்யின் உழைப்பு தான் காரணம். இது போலத்தான் தம்பி தனுஷும். இவர்கள் எல்லாம் உள்ளே வருவதற்கு அவர்கள் வீட்டார் காரணமாக இருக்கலாம். ஆனால் அவர்கள் நிலைத்து நிற்பதற்கு அந்த இடத்தை தக்க வைப்பதற்கு அவரவர்களின் கடுமையான உழைப்பு தான் காரணம்.  

 

அந்த உழைப்பு இருக்க வேண்டுமென்று  ஜுனியர் எம்.ஜி.ஆருக்கு சொல்வேன். மேலும் உன் தாத்தா பெயரை காப்பாற்ற வேண்டாம். கெடுத்துராமல் பார்த்துக் கொள். அதற்காக உனது ஆற்றலை, திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். வளர்ந்து வர வேண்டும்" என்றார். 

 

மேலும் "சினிமாவில் நிறைய கஷ்டப்பட வேண்டும். சினிமாக்காரர்கள் என்றால் வீடு கொடுக்க மாட்டார்கள். ஆனால் பெரிய ஆளாக மாறிவிட்டால் வீடு கொடுக்காவிட்டாலும் நாட்டை கொடுத்துவிடுவார்கள். திருமணம் செய்ய பெண் கொடுக்காவிட்டாலும் ஆள்வதற்கு மண் கொடுத்து விடுவார்கள். அப்படி சினிமாவில் ஒரு நல்ல படத்தை எடுத்த படக்குழுவினருக்கு எனது அன்பும் வாழ்த்துக்களும்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்