ADVERTISEMENT

முதல்ல ஆவினை காப்பாத்துங்க... அப்புறம் பஞ்ச் வசனம் பேசலாம்... ராஜேந்திர பாலாஜிக்கு பொன்னுசாமி பகிரங்க கடிதம்

04:16 PM Nov 14, 2019 | rajavel

ADVERTISEMENT

''அழிவை நோக்கி பயணப்படும் ஆவின் நிறுவனத்தைக் முதலில் காப்பாற்றுங்கள். அதன் பிறகு திருக்குறளை அச்சிடலாம்" என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனர் சு.ஆ.பொன்னுசாமி கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நீங்கள் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதில் தொடங்கி "மோடி தான் எங்கள் டாடி", "எல்லாம் மேல இருக்கறவன் பார்த்துப்பான்" என "பரபரப்பிற்கு பஞ்சம் வைக்காமல் பஞ்ச் வசனம்" பேசி வரும் உங்களால் தற்போது வரை பரபரப்பிற்கு சற்றும் குறையில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது தமிழகம்.


கடந்த 2017ம் ஆண்டு "தனியார் பாலை குடிப்பதால் தான் குழந்தைகளுக்குக் கூட புற்றுநோய் வருகிறது" என நீங்கள் துவங்கி வைத்த பிரச்சாரம் தற்போது மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வரை விரிவுபடுத்தப்பட்டு பொதுமக்கள் மத்தியில் பால் குடிப்பதா...? வேண்டாமா...? பாக்கெட் பாலினை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா...? வேண்டாமா....? என்கிற அச்சமும், பீதியும் ஏற்பட்டு பால்வளத்துறை இக்கட்டான நிலையில் உள்ளதை நீங்கள் அறிவீர்களா...? எனத் தெரியவில்லை

அதுமட்டுமின்றி தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான, தங்களது துறையின் கீழ் இயங்கும் ஆவின் நிறுவனம் பல கோடி ரூபாய் ஊழல்களிலும், பல்வேறு முறைகேடுகளிலும் சிக்கி சின்னாபின்னமாகி, தனியாருக்கு தாரை வார்க்கின்ற அளவிற்கு அழிவை நோக்கி செல்வதை நீங்கள் கண்டு கொண்டீர்களா...? அல்லது கண்டும் காணாமல் இருக்கிறீர்களா...? என தெரியவில்லை.


இந்நிலையில் பாஜகவின் தொழில்நுட்ப பிரிவு தலைவர் கோரிக்கை முன் வைத்தார் என்கிற ஒரே காரணத்திற்காக "மிக விரைவில் முதல்வரின் ஒப்புதலை பெற்று ஆவின் பால் பாக்கெட்களில் திருக்குறள் அச்சிட்டு வினியோகிக்கப்படும்." எனக் கூறியுள்ள தங்களின் வேகம் எங்களுக்கு வியப்பைத் தருகிறது.

உயிர் காக்கும் அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பாலில் கலப்படம், உயிர் காக்கும் பாலைக் குடித்தால் அது உயிரைக் குடிக்கும் கொடிய விஷம் என்றெல்லாம் செய்திகள் பரவி நாடே அல்லல்பட்டுக் கொண்டிருக்க திருக்குறளையும், திருவள்ளுவரையும் வைத்து அரசியல் வியாபாரம் செய்யும் பாஜகவிற்கு நீங்கள் துணை போவது தமிழக மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

தமிழக அரசின் மாநகர பேருந்துகளில் ஏற்கனவே இருந்த திருக்குறளை அழிக்கும் பணிகளும், மாநகராட்சி, காவல்துறை உள்ளிட்ட அரசுதுறையின் பல்வேறு ரசீதுகளில் தமிழ் கொஞ்சம், கொஞ்சமாக அகற்றப்பட்டு கொண்டு வரும் வேளையில் தற்போது திருக்குறளை வளர்க்க வேண்டும் என்கிற எண்ணம் பாஜகவிற்கு ஏற்பட்டுள்ளதைப் போன்று தற்போது தங்களுக்கும் ஏற்பட்டிருப்பதை காண்கையில் "ஆடு நனைவதை பார்த்து ஓநாய் அழுத கதை" என்கிற வாசகம் தான் எங்களுக்கு நினைவிற்கு வருகிறது.


எனவே நீங்கள் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும், அன்னைத் தமிழிற்கும் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என நினைத்தால் முதலில் ஊழலிலும், முறைகேடுகளிலும் சிக்கி தள்ளாடி அழிவை நோக்கி பயணப்படும் ஆவின் நிறுவனத்தை காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுக்கவும், பால் குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீது இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுத்திடவும், பால் தொடர்பாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தையும், சந்தேகத்தையும் இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிவர்த்தி செய்திடவும் துறை சார்ந்த அமைச்சர் என்கிற முறையில் தங்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

அதுமட்டுமின்றி அரசுதுறையின் பல்வேறு ரசீதுகளில் தமிழ் கொஞ்சம், கொஞ்சமாக அகற்றப்பட்டு கொண்டு வருவதை தடுத்து நிறுத்துவதோடு, "எங்கும் தமிழ், எதிலும் தமிழ்" என்கிற நிலையை கொண்டு வந்திடவும், இவை அனைத்திற்கும் மேலாக "அமைச்சர் பெருமக்கள் அனைவரும் 1330திருக்குறளையும் மனப்பாடம் செய்து அதனை ஊடகங்கள் வாயிலாக ஒப்புவிக்க" ஆவண செய்யுமாறு தங்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT