ADVERTISEMENT

முதல்வர் ஊரில் கரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பால் கலக்கத்தில் மக்கள்... கைதிகளைத் தொட யோசிக்கும் காவல்துறையினர்! 

01:35 PM Jun 23, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில், கரோனா நோய்த்தொற்றுக்கு முதன்முதலாக தூய்மைப் பணியாளர் ஒருவரின் மனைவி பலியாகியுள்ளார். இறந்தவர் வசித்த பகுதிக்குள் வெளியாட்கள் செல்லமுடியாத வகையில் சீல்வைக்கப்பட்டு, தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தமிழகத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை, இதுவரை சேலத்தை வசிப்பிடமாகக் கொண்டுள்ளவர்களில் 94 பேருக்கும் வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து சேலம் வந்தவர்களில் 125 பேருக்கும் நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், சேலத்தில் முதன்முதலாக கரோனா நோய்த்தொற்றுக்கு ஞாயிறன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். சேலம் அம்மாபேட்டை 9ஆவது கோட்டத்தைச் சேர்ந்த தூய்மைப்பணியாளர் ஒருவரின் மனைவி, தொடர்ந்து காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். அவர் சனிக்கிழமையன்று (ஜூன் 13) சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிப் படுத்தப்பட்டது. இந்நிலையில் அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இறந்தவரின் கணவர், அவருடைய மகன், மகள் ஆகியோருக்கும் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, அவர்களுக்கும் சேலம் அரசு மருத்துவமனையில் தனிமை வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், சென்றுவந்த இடங்கள் ஆகிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

கைதிகளைத் தொடத் தயங்கும் போலீஸ்!

பல்வேறு குற்ற வழக்குகள் அல்லது சந்தேகத்தின்பேரில் விசாரிக்கும்போதும், வாக்குமூலம் எழுதி வாங்கும்போதும், கைகளுக்கு விலங்கிட்டு நீதிமன்றம், மருத்துவமனை, சிறைச்சாலைகளுக்கு அழைத்துச்செல்வது வரையிலும் அவர்களிடம் காவல்துறையினர் நெருங்கிச் செல்வது என்பது தவிர்க்கமுடியாதது. ஆனால், கரோனா நோய்த்தொற்று அபாயம் பெரும் விசுவரூபம் எடுத்துள்ள நிலையில், கைதிகளை முன்புபோல் நெருங்கிச்சென்று விசாரிப்பதைக் காவல்துறையினர் தவிர்த்துவருகின்றனர்.

சேலத்தில், பெண்களை ஆபாசப்படம் எடுத்து, பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாக தாதகாப்பட்டியைச் சேர்ந்த லோகநாதன் (35), அவருடைய கூட்டாளிகள் சிவா (36), பிரதீப் (28) ஆகிய மூவரை சேலம் அனைத்து மகளிர் காவல்துறையினர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கைதுசெய்தனர். இவர்களில் முக்கியக் குற்றவாளியான லோகநாதனுக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து, அவர்களைக் கைதுசெய்வது மற்றும் விசாரணையில் முக்கியப் பங்காற்றிய உதவி ஆணையர் ஈஸ்வரன், சேலம் நகர காவல் ஆய்வாளர் குமார், மகளிர் காவல் ஆய்வாளர் பழனியம்மாள் மற்றும் காவலர்கள் உள்பட 50 பேருக்கும் கரோனா பரிசோதனை செய்யும்நிலை ஏற்பட்டது. மகளிர் காவல்நிலையமும் இழுத்து மூடப்பட்டது. இதில், குற்றவாளிகளைக் கைதுசெய்து நீதிமன்றத்துக்கு பாதுகாப்பாக அழைத்துச்சென்ற அன்னதானப்பட்டி காவலர் ஒருவருக்கும் குற்றவாளிகளிடமிருந்து நோய்த்தொற்று ஏற்பட்டது மாநகர காவல்துறையினரை பெரும்பீதி அடையவைத்தது.

இச்சம்பவத்திற்கு முன்பே, இரும்பாலை காவல்நிலையத்தில் விசாரணைக்கு வந்த கைதி ஒருவருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டதால், அந்தக் காவல்நிலையமும் மூடப்பட்டது. இதையடுத்து, திறந்தவெளியில் ஷாமியானா பந்தலமைத்து மக்களிடம் புகார் மனுக்களைப் பெற்றுவந்தனர்.

வேறுசில மாவட்டங்களிலும் குற்றவழக்குகளில் கைதான சிலருக்கு கரோனா தொற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் காவல் துறையினர், எக்காரணம் கொண்டு இனி கைதிகளை நெருக்கமாகச் சென்று விசாரிக்கக்கூடாது என்ற முடிவுக்கு வந்துள்ளனர். போலீசாரையும் அலறவிட்டிருக்கிறது கண்ணுக்குத் தெரியாத கரோனா.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT