ADVERTISEMENT

‘ராஜேந்திரபாலாஜியை பழிவாங்குவதா?’ - கட்சியிலிருந்து விலகிய திமுக உறுப்பினர் கேள்வி! 

06:52 PM Jan 12, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

விருதுநகர் மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது குறித்து அதிரடியாக கருத்து கூறிவருவதால், பத்திரிக்கைகளில் அடிக்கடி ‘விநாயகமூர்த்தி’ பெயர் அடிபடும். சிறு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் என்ற இவரது அடையாளத்தை, இம்மாவட்ட அரசு அலுவலகங்கள் மிரட்டலாகவே பார்க்கிறது. அதனால், சிறு பட்டாசு உற்பத்தியாளர்கள், அரசு அலுவலர்களால் தங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால், விநாயகமூர்த்தியை தேடிச் செல்வது வாடிக்கையாகிவிட்டது.

எதிர்க்கட்சிகளில் உள்ள நிர்வாகிகள் பலரும், ஆளும்கட்சி என்பதால் திமுகவுக்கு தாவிவருகிறார்கள். விநாயகமூர்த்தியோ, தனது திமுக உறுப்பினர் கார்டை, திமுக தலைமை அலுவலகத்துக்கு அனுப்பிவைத்து, கட்சியிலிருந்து விலகிக்கொள்கிறேன் எனக் கடிதம் எழுதியிருக்கிறார். இதற்கான காரணம் என இவர் குறிப்பிட்டுள்ளது – முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கைதான விவகாரத்தில், திமுக அரசு நேர்மையாகச் செயல்படவில்லை என்பதுதான்.

திமுக தலைவர்களை, அமைச்சராக இருந்தபோது ராஜேந்திரபாலாஜி கண்டபடி பேசி வெறுப்பேற்றியதை, திமுகவினர் இன்னும் மறக்கவில்லை. பணமோசடி வழக்கில் அவரைக் கைது பண்ணி சிறையில் தள்ளியதை வெகுவாகவே ரசிக்கின்றனர். திமுக உறுப்பினர் விநாயகமூர்த்தியோ வேறு முகம் காட்டுகிறார். ‘இது ஸ்டண்ட் மாதிரி தெரிகிறதே?’ என்று அவரிடமே கேட்டோம்.

“நான் 15 ஆண்டுகால திமுக உறுப்பினர். அண்ணா, கலைஞர், தளபதி போன்ற திமுக தலைவர்களை நான் பெரிதும் மதிக்கிறேன். ஆனாலும், மனசாட்சி உறுத்துதே? தேர்தல் நேரத்துல தளபதியை ராஜேந்திரபாலாஜி பேசினப்ப, ரத்தமெல்லாம் கொதிச்சது. அப்பத்தான் அதிமுக கட்சிக்காரங்க சொன்னாங்க.. அது அவரோட வீக்னஸ்ன்னு. சொந்தக் கட்சிக்காரனையே கண்டபடி திட்டுவாருன்னு வேற சொன்னாங்க. ஆனாலும், மனசுல பட்டத பேசுற டைப்புன்னாங்க. ஒரு அமைச்சரா இருக்கிறவரு, நா காக்க-ன்னு வள்ளுவர் சொன்னத கடைப்பிடிக்கலைன்னா எப்படின்னு, அப்ப அவரு மேல கோபம் கோபமா வந்துச்சு. அப்புறம் எதுக்கு நான் திமுகவுல இருந்து விலகினேங்கிற விஷயத்துக்கு வர்றேன்.

இந்தமாதிரி ஒருத்தர், சாதி பலம் இல்லைன்னாலும், ரெண்டு தடவை எம்.எல்.ஏ. ஆகி 10 வருஷம் அமைச்சரா இருந்திருக்காரு. ஏன்னா.. பட்டாசுத் தொழிலாளர் நலன்ல அவரு அக்கறையா செயல்பட்டதுதான். பட்டாசுத் தொழிலுக்கு ரொம்பவும் சப்போர்ட்டா இருந்ததுதான். இங்கே சிவகாசில இருக்கிற முதலாளிக, எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தொகுதி எம்.எல்.ஏ. கேட்டாலும், கேட்கலைன்னாலும், கட்சி நிதியோ, வேற நிதியோ தாராளமா கொடுப்பாங்க. ஆனா, அமைச்சர்ங்கிற அதிகாரத்துல இருந்தும், ராஜேந்திரபாலாஜி யார்ட்டயும் நிதி கேட்டதும் இல்ல. எந்த முதலாளியும் கொடுத்ததும் இல்ல. அதனால, தொந்தரவு தராதவரா அவரைப் பார்த்தாங்க.

எல்லா மனுஷனுக்கு உள்ளயும் நல்லது இருக்கும்; கெட்டதும் இருக்கும். வாய் ரொம்பப் பேசியதுதான் ராஜேந்திரபாலாஜிகிட்ட இருக்கிற கெட்ட விஷயம். சரி பேசக்கூடாதத பேசிட்டாரு. அதுக்கு அப்பவே வழக்கு போட்டிருக்கலாம். அதான், சொத்துகுவிப்பு வழக்கு இருக்குல்ல. அதை வேகப்படுத்தி கோர்ட் மூலம் தண்டனை வாங்கித் தரலாம். இத எல்லாம் விட்டுட்டு, பொய் வழக்கு போட்டு ஓடவிட்டதும், பெயில் கிடைக்கிறதுக்குள்ள தீவிரமா தேடி அரெஸ்ட் பண்ணி, திருச்சி ஜெயில்ல அடைச்சதும், ஏத்துக்கிற மாதிரியில்ல. முகாந்திரமே இல்லாம, நடுராத்திரில கலைஞரை ஜெயலலிதா கவர்மெண்ட் அரெஸ்ட் பண்ணுனப்ப, கொடுமைக்காரின்னு நாம திட்டுனோம்ல. இப்ப, எடப்பாடி திமுகவ திட்டுறாரு. அது அரசியல். ஆனா.. இந்த தொகுதி மக்கள், குறிப்பா நான் பழகிட்டு இருக்கிற அதிமுககாரங்க, ராஜேந்திரபாலாஜி விஷயத்த சொல்லி, என்னய்யா ஆட்சி இதுன்னு கேட்கிறப்ப, என்னால பதில் சொல்ல முடியல.

அப்புறம், இந்த விஜயநல்லதம்பி எப்படிப்பட்ட ஆளுன்னு விருதுநகர் மாவட்டத்துக்கு நல்லாவே தெரியும். அவரு கொடுத்த புகாருல ராஜேந்திரபாலாஜிய அரெஸ்ட் பண்ணுனது கொஞ்சம்கூட சரியில்ல. பத்து வருஷம் அமைச்சரா இருந்தப்ப, ராஜேந்திரபாலாஜி ஊழல் பண்ணிருப்பாரு. அதுல அரெஸ்ட் பண்ணுனா யாரு கேட்கப்போறா? ஒருவேளை ராஜேந்திரபாலாஜி பணம் வாங்கிட்டு ஆவின் வேலைக்கு ரெடி பண்ணமுடியாம போயிருந்தா, நிச்சயம் திருப்பி தந்திருப்பாரு.

ராஜேந்திரபாலாஜிய கூட ரெண்டு நாளு ஜெயில்ல வைக்கணும்னு, ஒரு சிட்டிங்குக்கு பல லட்சம் வாங்குற மூத்த வக்கீல் முகுல் ரோத்தகிய, தமிழக அரசு சார்பா வாதாட வச்சாங்க. இதை எப்படி சரின்னு சொல்லமுடியும்? அரசுப் பணத்தை சொந்தப் பகைக்காக வீணடிக்கலாமா? இப்ப பாருங்க, சுப்ரீம் கோர்ட்டே சொல்லிருச்சு.. கைதுபண்ணுன விதம் சரியில்லைன்னு. ராஜேந்திரபாலாஜிக்கு நிபந்தனை ஜாமீனும் கொடுத்திருச்சு” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT