ADVERTISEMENT

ரஜினி அட்டாக்கிற்கு  திமுக மௌனம் ஏன்? 

01:54 PM Mar 20, 2020 | rajavel

ADVERTISEMENT

ரஜினி அரசியலுக்கு வருவது பற்றிய தனது நிலைப்பாட்டை சமீபத்தில் தெரிவித்திருந்தார். கட்சித் தலைமைக்கு ஒருவர்; ஆட்சித் தலைமைக்கு ஒருவர், தேர்தலுக்குப் பிறகு தேவையற்ற கட்சிப் பதவிகள் கலைக்கப்படும், மக்களிடம் ஒரு புரட்சி அலை உருவாக வேண்டும் என 3 திட்டங்களை முன்னிறுத்திய ரஜினி, ’’தமிழகத்தில் அரசியல் மாற்றமும் ஆட்சி மாற்றமும் இப்போதைக்கு இல்லைன்னா எப்போதுமே இல்லை ’’ என்பதை மையப்படுத்தியிருந்தார்.

ADVERTISEMENT



ரஜினியின் இந்த தத்துவம், தமிழக அரசியலில் நேர்மறை மற்றும் எதிர்மறை விமர்சனங்களை உருவாக்கின. அவரது பேச்சினை மக்களிடம் கொண்டு செல்வதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர் ரஜினி மக்கள் மன்றத்தினர். இந்த நிலையில், கடந்த வாரம் தனியார் இணையத்தளத்தின் ஆண்டு விழா ஒன்றில் கலந்துகொண்ட ரஜினி, மக்களிடம் புரட்சி அலை எப்படி உருவாகும் என்பதை சுட்டிக்காட்டினார்.

அதாவது, ’’ கணக்குக் கேட்டதற்காக திமுகவில் இருந்து எம்.ஜி.ஆரை வெளியேற்றினார்கள். உடனே எம்ஜிஆர்., கணக்கு கேட்டது தப்பா? என மக்களிடம் நியாயம் கேட்டார். அப்போது எம்.ஜி.ஆருக்கு அனுதாப அலை உருவானது. எம்.ஜி.ஆர். முதல்வரானார். அதேபோல, 1991-ல் ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்டபோது திமுகவுக்கு எதிரான அலை உருவானது. முதல்வரானார் ஜெயலலிதா. இப்படித்தான் மக்களிடம் புரட்சி உருவாகுது‘’ என விவரித்த ரஜினி, ’’ தன்னுடைய பேச்சு ஒரு அலையாக மாறி தற்போது சுழலாக உருமாறியிருக்கிறது. அது சுனாமியாக மாறும் ‘’ என்றார்.


தனது அரசியல் நிலைப்பாடு குறித்த முந்தைய கருத்துக்களுக்கான பொருள் விளக்கம் தருவது போல ரஜினியின் பேச்சு இருந்தாலும், முழுக்க முழுக்க அரசியல் ரீதியாக திமுகவை தாக்குவதே முதன்மையாக இருந்தது. திமுகவை தாக்கிப் பேசிய ரஜினியின் கருத்துகளுக்கு எதிர்வினையாற்ற வேண்டும் என திமுக இளைஞர் அணியும் திமுகவின் ஐ.டி.விங்கும் கொந்தளித்தனர்.

தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர். வெளியேற்றப்பட்ட சூழலை விளக்கி ரஜினியின் பேச்சுக்கு மறுப்புத் தெரிவிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலினிடம் மூத்த தலைவர்கள் சிலர் வலியுறுத்தியிருக்கிறார்கள். ஆனால், இது குறித்து ரஜினியின் பேச்சை கண்டித்து திமுக தரப்பில் எந்த அறிக்கையும் வரவில்லை; இரண்டாம் நிலை தலைவர்களின் விமர்சனங்களும் வரவில்லை. ஆழ்ந்த மௌனமே அனுஷ்டிக்கப்பட்டிருக்கிறது.

திமுகவின் இந்த மௌனத்திற்கு என்ன காரணம் என விசாரித்தபோது, ‘’ரஜினியின் பேச்சை கண்டித்து அறிக்கை வெளியிட வேண்டும் என மூத்த தலைவர்கள் வலியுறுத்திய போது கட்சி தலைமை அதனை ஏற்றுக்கொண்டது. ஆனால், திமுகவின் அரசியல் ஆலோசகராக பொறுப்பேற்றுக்கொண்டிருக்கும் பிரசாந்த் கிஷோர், ரஜினியின் பேச்சுக்கு எதிர்வினையாற்ற வேண்டாம் என கேட்டுக்கொண்டதால் தவிர்க்கப்பட்டிருக்கிறது‘’ என்கிறார்கள் அறிவாலய நிர்வாகிகள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT