ADVERTISEMENT

ஓ.பி.எஸ். மேல்முறையீடு மனு; அதிர்ச்சி தந்த உயர்நீதிமன்றம்!  

11:30 AM Mar 29, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தேதி கடந்த 17 ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, 18 ஆம் தேதி இ.பி.எஸ். மனுத்தாக்கல் செய்தார். இ.பி.எஸ். மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததும் அவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் எனச் சொல்லப்பட்டது. இந்நிலையில், ‘அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முன்னிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், ஆர்.வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சார்பில் தனித்தனியாக முறையீடு செய்யப்பட்டது.

முன்னதாக அதிமுக பொதுக்குழு கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்தது. இதனை ரத்து செய்யச் சொல்லி ஓ.பி.எஸ். தரப்பிலிருந்து மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம், “பொதுக்குழு கூட்டியது செல்லும். பொதுக்குழுத் தீர்மானங்கள் குறித்து ஓ.பி.எஸ். தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்” எனத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பொதுச்செயலாளர் வழக்கை நீதிபதி குமரேஷ் பாபு விசாரிக்குமாறு பொறுப்பு நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் முன்னிலையில் முறையீடு செய்யப்பட்டது. அதனையேற்ற நீதிபதி குமரேஷ் பாபு பொதுக்குழுத் தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் வழக்கு ஆகியவற்றை அவசர வழக்காக ஏற்று விசாரணையில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குமரேஷ்பாபு நேற்று 28 ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார்.

அந்தத் தீர்ப்பில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் பதவி தேர்தலுக்கு எதிராக ஓ.பி.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேசமயம், அதிமுக பொதுக்குழு தீர்மானம் தொடர்பான வழக்கில் ஓ.பி.எஸ். மேல்முறையீடு செய்துகொள்ளலாம் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து ஓ.பி.எஸ். தரப்பிலிருந்து தனி நீதிபதி வழங்கிய பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் எனும் உத்தரவை எதிர்த்து நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு முன்பு உடனடியாக மேல் முறையீடு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்து, ஓ.பி.எஸ். மேல் முறையீடு செய்த அதே நேரத்தில் இ.பி.எஸ். அதிமுகவின் பொதுச்செயலாளராக உடனடியாக பதவி ஏற்றுக்கொண்டார்.

ஓ.பி.எஸ். தரப்பு மேல்முறையீடு செய்துள்ள மனுவில், தனி நீதிபதியின் உத்தரவு முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. கட்சியின் விதிகளுக்கு எதிராக உள்ளதாகவும் ஓ.பி.எஸ். தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தனிநீதிபதியின் தீர்ப்பு குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மேல் முறையீட்டு வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் வரை அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்படுவதற்கு தடை விதிக்கவும் தனி நீதிபதியின் உத்தரவிற்கும் தடைவிதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓ.பி.எஸ். தரப்பு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி மகாதேவன் அமர்வு, இந்த மேல் முறையீட்டு மனுவை இன்று (29ம் தேதி) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நேற்று தெரிவித்தது.

இன்று இந்த மனு மீதான விசாரணை நடைபெறும் என ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், ஓ.பி.எஸ். மேல்முறையீட்டு மனு நாளை (30ம் தேதி) விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT