ADVERTISEMENT

கோவைசரளா நேர்காணல் செய்வதா? யாரை எங்கே வைப்பது என்று கமலுக்கு தெரியவில்லை! ம.நீ.மய்யத்திலிருந்து வெளியேறிய குமரவேல் குமுறல்

06:29 PM Mar 18, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

நேச்சுரல்ஸ் பியூட்டி பார்லர் நிறுவனத்தின் தலைவர் சி.கே.குமரவேல் மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு உறுப்பினராகவும், கடலூர், நாகை பொறுப்பாளராகவும், இருந்தார். இவர், இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து வெளியேறினார்.

ADVERTISEMENT

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து வெளியேறியது ஏன் என்பது குறித்து அவர் இன்று மாலையில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர், ‘’கமல்ஹாசனின் நம்பகத்தன்மையை வைத்துதான் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்டது. மாற்று அரசியலை எதிர்பார்த்துதான் நான் அக்கட்சியில் சேர்ந்தேன். ஆனால், இங்கேயும் வழக்கமான அரசியல் என்றபோது அதிர்ச்சியாக இருந்தது. இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்று நினைத்தபடியே கடந்த ஒரு ஆண்டாக அக்கட்சியில் இருந்தபோது தேர்தல் வந்துவிட்டது.

மக்களவை தேர்தலில் கடலூர் தொகுதி்யில் நிற்க முதலில் யாரும் முன்வராததால் நானே நிற்பதாகச்சொன்னேன். அதன்பின்னர்தான் இரண்டு பேர் விருப்பமனு கொடுத்தார்கள். கடலூர் தொகுதியில் நிற்பதற்காக நேர்காணலில் பங்கேற்றேன். கட்சியில் ஒரு வாரத்திற்கு முன்பு சேர்ந்த நடிகை கோவைசரளா நேர்காணல் செய்தார். கோவை சரளா எல்லாம் உன்னை நேர்காணல் செய்தவற்கா நீ அரசியிலுக்கு சென்றாய் என்று என் மனைவி என்னை கடிந்துகொண்டார். கோவைசரளாவை வைத்து வேட்பாளர் நேர்காணல் நடத்துவதை என்னாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கோவைசரளா நல்ல நடிகையாக இருக்கலாம். அதற்காக யாரை எங்கே வைப்பது என்று கமல்சாருக்கு தெரியவில்லை. இதுமட்டுமல்ல, கட்சியில் சிலர் எடுக்கும் முடிவுகளுக்குத்தான் கமல்சார் தலையசைக்கிறார்.

நேர்காணலுக்கு பின்னர் நான் தான் வேட்பாளர் என்று முடிவானபோது, கடலூரில் பணியை தொடங்கும்படி மையக்குழுவில் இருந்த மகேந்திரன் என்னிடம் கூறியதால், நான் கடலூரில் கிரவுண்ட் வொர்க் ஆரம்பித்தேன். முதற்கட்டமாக நான் முகநூலில், கடலூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக போட்டியிடுகிறேன். எனக்கு ஆதரவு தாருங்கள்..என்று பதிவிட்டேன். நேர்காணல் முழுவதுமாக முடிந்து வேட்பாளர்களை தலைமை அறிவிப்பதற்கு முன்பாகவே இப்படிச்செய்ததால் இது தவறு என்று கூறினார்கள். நானும் இது சம்பந்தமாக கமல்சாரை சந்தித்து மன்னிப்பு கேட்டுக்கொண்டேன். என்னால் கட்சிக்கு பிரச்சனை என்றால் நான் வேட்பாளராக நிற்கவில்லை என்று சொல்லிவிட்டேன்.

தொகுதியில் என் வேகத்தை காட்டவேண்டும் என்றுதான் முகநூலில் பதிவிட்டேன். பொதுவாக புதுசாக ஆரம்பிக்கும் கம்பெனிதான் எனர்ஜியுடன் வேகத்தை காட்டும். பழைய கம்பெனிதான் யானை மாதிரி நடப்பாங்க. ஆனால், பழைய கட்சியெல்லாம் வேட்பாளர்களை அறிவித்துவிட்டார்கள். இன்னும் மக்கள் நீதி மய்யம்தான் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

எந்த இடத்தில் மெதுவாக செல்லவேண்டும் எந்த இடத்தில் வேகமாக செல்லவேண்டும் என்று கமல்சாருக்கு அட்வைஸ் கொடுப்பவர்கள் சரியாக இல்லை. அவர்கள் சொல்லுவதை வைத்து முடிவெடுப்பதால் கமல்சாரின் நடவடிக்கைகளும் தவறாக இருக்கிறது. இது கட்சிக்கே பலவீனமாக அமைகிறது.

நான் நேர்காணலில் பங்கேற்றது உண்மை. ஆனால், நான் பங்கேற்கவில்லை என்று கட்சி கூறுகிறது. உங்களால் எவ்வளவு செலவு செய்ய முடியும்? என்ற கேள்வியை கேட்டார் கோவைசரளா. அவரால் அதற்கு மேல் நேர்காணலில் எந்த அறிவுப்பூர்மான கேள்வியையும் கேட்க முடியாது.

கடந்த ஒருவருடமாக கட்சியில் இருந்தும் தலைவர் கமல்சார் செல்போன் நம்பர் எனக்கு தெரியாது. கட்சியின் மேல்மட்டத்தில் உள்ள சிலருக்குத்தான் தெரியும். என்னால் நேரடியாக கமல்சாரை தொடர்புகொள்ள முடியாது. இதுதான் மற்ற அரசியல் கட்சியில் இருக்கு. அப்புறம் எப்படி மக்கள் நீதிமய்யத்தை மாற்று அரசியல் என்று சொல்வது?’’என்று தெரிவித்தார்.


முன்னதாக குமரவேல் விலகல் குறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘’சமூக வலைத்தளங்களில் குறிப்பாக பேஸ்புக்கில் கடலூர் பாராளூமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியிட்டிருந்தார். மக்கள் நீதி மய்யம் கட்டுப்பாடுகளை மீறும் செயல்களை எவ்விதத்திலும் அனுமதிக்காது. ஜனநாயக முறைப்படி வேட்பாளர் விருப்பமனு பெறப்பட்டு , நேர்காணல் நடைபெற்றுக்கொண்டிருக்கையில், பல நூறு வேட்பாளர்கள் நேர்காணலுக்கு காத்திருகின்ற சூழலில் நேர்காணலுக்கு கூட வராமல் தான் தேர்தலில் போட்டியிட உள்ளதாக குமரவேல் அறிவித்திருப்பது கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல். இது குறித்து அவர் அளித்துள்ள விளக்கம் ஏற்றுக்கொள்ளகூடிய வகையில் இல்லை. இந்த நிலையில் அவரே ராஜினாமா செய்திருக்கிறார். அவரின் ராஜினாமாவை கட்சி தலைமை ஏற்றுக்கொள்கிறது’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT