ADVERTISEMENT

தோல்வி பயத்தால் மோடியின் ஸ்டார் அந்தஸ்தை பறித்தது பாஜக!

11:27 AM Nov 19, 2018 | Anonymous (not verified)

5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜகவின் ஸ்டார் பிரச்சாரகர் என்ற அந்தஸ்த்தை மோடியிடம் இருந்து பாஜக பறித்திருக்கிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

மோடி பிரச்சாரம் செய்தால் பாஜக வெற்றி பெற்றுவிடும் என்ற ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருந்த பாஜக, தனது ஆட்சி நடைபெறும் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் தோல்வி பயம் காரணமாக மோடியின் கூட்டங்களை குறைத்திருக்கிறது.

கடந்த குஜராத் தேர்தலில் மோடி தனது சொந்த மாநிலத்தில் வெற்றியை தக்க வைக்க பொதுக்கூட்டங்களில் அழுதார். காங்கிரஸும் பாகிஸ்தானும் சேர்ந்து சதி செய்வதாக கூசாமல் பொய் பேசினார். அப்படி இருந்தும் பாஜகவின் வாக்குச் சதவீதம் குறைந்து, சட்டப்பேரவையிலும் குறைவான மெஜாரிட்டியுடன் பாஜக ஆட்சியைப் பிடிக்க முடிந்தது.

அதன்பின்னர் சமீபத்தில் நடைபெற்ற கர்நாடகா தேர்தலில் தொடர்ச்சியாக 23 பொதுக்கூட்டங்களில் பேசி பிரச்சாரம் செய்தும் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. எதிர்க்கட்சிகள் சிதறியிருந்த நிலையிலும் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. ஆனால், இப்போது எதிர்க்கட்சிகள் அனைத்தும் பாஜகவை வீழ்த்துவதற்காக இணைய முடிவெடுத்துள்ளன.

இப்படிப்பட்ட நிலையில், பாஜக ஆட்சி செய்யும் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் மோடி பறந்து பறந்து பிரச்சாரம் செய்தாலும் வெற்றிபெற முடியாது என்று முடிவாகிவிட்டது. எனவே, இந்த மாநிலங்களில் மோடியை பிரச்சாரம் செய்ய வைத்து படுதோல்வியைச் சந்திக்க பாஜக விரும்பவில்லை. ஏனெனில் தேர்தல் நடைபெறவுள்ள மிஜோரம், தெலங்கானா மாநிலங்களிலும் பாஜகவுக்கு வாய்ப்பில்லை. அதாவது, தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களிலும் பாஜக தோற்பது உறுதியாகிவிட்டதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ராஜஸ்தானிலும், மத்தியப் பிரதேசத்திலும் பாஜகவுக்குள்ளேயே குத்துவெட்டு தூள்பறக்கிறது. அதிருப்தி வேட்பாளர்கள் அதிகரித்துள்ளனர். இந்நிலையில் மோடி பிரச்சாரம் செய்தும் தோற்றால் அவருடைய தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திப்பது கடினம் என்று பாஜக நினைக்கிறது. எனவே, இந்தத் தேர்தல்களில் பாஜகவுக்காக அமித் ஷாவும், உ.பி. முதல்வர் யோகி ஆதித்திய நாத்தும் முக்கிய பிரச்சாரகர்களாக செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மோடி கடைசி நாட்களில் மட்டும் சில கூட்டங்களில் பேசுவார் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற இதே மூன்று மாநிலங்களில் மோடி பிரச்சாரம் செய்ததால்தான் பாஜக வெற்றி பெற்றதாக கூறி மோடியை பிரதமர் வேட்பாளராக்கி பிரச்சாரம் செய்தது பாஜக. ஆனால், இப்போது, மோடி பிரச்சாரம் செய்தாலும் பாஜகவை காப்பாற்ற முடியாது என்பதை உணர்ந்தது மட்டுமல்ல, அந்த தோல்விக்கு மோடியை பொறுப்பாக்கவும் பாஜக தயாராக இல்லை.

எப்படி தந்திரம் செய்தாலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக படுதோல்வியைச் சந்திக்கப்போவது நிச்சயம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT