ADVERTISEMENT

வேலுமணி VS மு.க.ஸ்டாலின்! அதிகரிக்கும் அரசியல் மோதல்கள்!  

12:22 PM Jun 08, 2020 | rajavel

ADVERTISEMENT


தி.மு.க.வின் மா.செ., எம்.எல்.ஏ. உள்பட முக்கிய நிர்வாகிகள் மீது எடப்பாடி அரசு வழக்குப் போடுவதும், அவர்களைக் கைது செய்து சிறையில் அடைப்பதும் தி.மு.க. தலைவர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. குறிப்பாக, உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியின் தூண்டுதலில் தி.மு.க.வினரை குறிவைத்து காவல்துறையினர் செயல்படுவதாகக் குற்றச்சாட்டுகளை வீசி வருகிறது தி.மு.க. தலைமை. இந்த நிலையில், ’பொய் வழக்கு போடும் அராஜக நடவடிக்கையை, அமைச்சர் வேலுமணி உடனே நிறுத்தாவிட்டால், தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்' என, 7-ஆம் தேதி நடந்த கோவை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ADVERTISEMENT


ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க., நிர்வாகிகளுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாக ஆலோசனை நடத்தினார் மு.க.ஸ்டாலின். அந்த ஆலோசனையில், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, அனைவருக்கும், அனைத்திற்கும், சட்டாம்பிள்ளையாக மாறி உள்ளார். அவருடைய விருப்பு வெறுப்புக்கேற்ப, மக்களாட்சி மாண்புகளைக் காவு கொடுத்து, கோவை மாவட்டத்தைத் தீவாக நினைத்து, தனியாட்சி நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது.

ஜனநாயகக் கடமை மற்றும் நெறிமுறைப்படி, மக்கள் கடமையாற்றும் தி.மு.க.,வினர் மீது, போலீஸ் துறையை ஏவி, பொய் வழக்குப் போடும் அராஜக நடவடிக்கையை, அமைச்சர் வேலுமணி மேற்கொண்டுள்ளார். இந்த நடவடிக்கைகளை, உடனே நிறுத்தாவிட்டால், அதற்கான தொடர் போராட்டங்களை, அவர் சந்திக்க நேரிடும் என ஸ்டாலின் பேசியதற்கேற்ப தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், தி.மு.க.வின் தீர்மானத்திற்கும் மு.க.ஸ்டாலின் முன்னெடுக்கும் போராட்டத்திற்கும் பதிலடி தரும் வகையில் தயாராகி வருகிறார் உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி. இது குறித்து அறிக்கை கொடுத்துள்ள அவர், கரோனா நெருக்கடிகளிலிருந்து தமிழகத்தைக் காப்பாற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளைப் பட்டியலிட்டு சுட்டிக்காட்டிவிட்டு, ‘’முதல்வர் எடப்பாடியின் சிறப்பான செயல்பாடுகளைத் தாங்க முடியாமல், மனம் குமுறுகிறார் மு.க.ஸ்டாலின். அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் அவரது முயற்சி பலிக்காது.

தமிழகத்தில் 5 முறை ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுத்த தி.மு.க.வில், கலைஞரின் வாரிசு என்ற ஒரே காரணத்திற்காக, துணை முதல்வராகப் பொறுப்பேற்று உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவி வகித்த மு.க.ஸ்டாலின், துறை சார்பாக வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்தியதில்லை. உள்ளாட்சித்துறை அமைச்சராக நான் பொறுப்பேற்ற பின்பு, தமிழக மக்களுக்குச் சிறப்பாகப் பணியாற்றியதற்காக, 123 தேசிய விருதுகளைப் பெற்று, உள்ளாட்சியில் சாதனை படைத்து, பாராட்டைப் பெற்றுள்ளதைக் கண்டு பொறுக்க முடியாமல், சாதாரணமான விவசாயக் குடும்பத்தில் பிறந்த என்னோடு வெற்று அறிக்கை வாயிலாக மலிவு அரசியல் செய்கிறார்.


முதல்வர் எடப்பாடியின் செயல்பாட்டிற்கு ஈடுகொடுக்க முடியாமல், எதிர்க்க இயலாத நிலையில் தமிழகத்தின் நலன்களைப் புறக்கணித்து, கோவையில் மாவட்ட அளவில் போராட்டம் நடத்திட 5 மணிநேரம், தி.மு.க. மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேரிடர் நேரத்திலும், சாதாரணமான என்னை எதிர்த்து, மு.க.ஸ்டாலின் போராட்டங்களைத் தூண்டிவிடுவது, வேடிக்கையாகவும், விந்தையாகவும் உள்ளது. சரிந்து கொண்டிருக்கும் தன் அரசியல் செல்வாக்கை கரோனா மூலமாக சரிக்கட்டலாம் என்று ஸ்டாலின் நினைத்தால் அவருக்குப் பெரிய ஏமாற்றமே மிஞ்சும்!

கடந்த 2006 – 2011 தி.மு.க. ஆட்சியில் கோவை மாவட்டத்தில் பேரூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த என்மீதும், 10 சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் காவல்துறையினரை வைத்து, பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி, 5 முறை பொய் வழக்குகளைப் பதிவு செய்ததன் அடிப்படையில் 17 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டோம். அவ்வழக்குகளைச் சட்டரீதியாக எதிர்கொண்டோம் என்பதை அன்றைய துணை முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் மறந்துவிட்டாரா?

கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. கழகப் பொறுப்பாளரான தென்றல் செல்வராஜ், அவரிடம் உதவியாளராகப் பணிபுரியும் கீர்த்தி ஆனந்த் என்பவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணைக்காக அவரை கைது செய்து காவல்துறை வாகனத்தில் அழைத்து வரும்போது, வால்பாறை சாலையில் சுமார் 50க்கும் மேற்பட்டோருடன் தென்றல் செல்வராஜ் காவல்துறை வாகனத்தை மறித்து அவரது உதவியாளரை விடுவித்து தலைமறைவானார்.


காவல்துறையினரால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட கைதியை விடுவித்து சென்றதால், காவல்துறையினர் சட்ட விதிகளின்படி செயல்பட்டுச் சட்டம் ஒழுங்கைக் காக்க தென்றல் செல்வராஜ் மற்றும் அவரது உதவியாளரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். காவல்துறையினர் தங்களது பணியினை செய்ய விடாமல் தடுத்து, அராஜபோக்கில் ஈடுபட்ட தி.மு.க.வைச் சார்ந்த பொறுப்பாளர்களையும், குண்டர்களையும் கண்டிப்பதை விடுத்து, மக்களை திசை திருப்பும் வகையில், எனக்கு எதிராகப் போராட்டத்தைக் கோவையில் நடத்துவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார் ஸ்டாலின்.

அ.தி.மு.க. அரசுக்கு எதிராக அவதூறு பிரச்சாரங்களைத் தினமும் அறிக்கையாக வெளியிட்டு, அடுக்காத பழிபோட்டு பொதுவாழ்வை வென்றுவிடலாம் என நினைக்கும் மு.க.ஸ்டாலின் தன்னைத் திருத்திக்கொள்வது நல்லது! மக்கள் பணியாளர்களுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டி அவதூறு பரப்பும் பூச்சாண்டி வித்தைகளை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும்’’ எனக் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறார் அமைச்சர் வேலுமணி. அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் இப்படி அறிக்கைகளில் மோதிக்கொள்வதை அமைதியாக கவனித்து வருகிறது மத்திய பா.ஜ.க. அரசு.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT