ADVERTISEMENT

மே 12ல் தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம்; தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

05:20 PM Apr 23, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக மாற்ற வழி செய்யும் சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக ஆகிய கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் இந்த சட்ட மசோதாவிற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளது.

தலைமைச் செயலகத்தில் நாளை வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்திய சட்ட மசோதா குறித்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சி.வி.கணேசன் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த சட்ட மசோதா குறித்தும் விளக்கி கூறப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், 12 மணி நேர வேலை சட்ட மசோதாவை எதிர்த்து தொழிற்சங்கங்கள் மே 12 ஆம் தேதி வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடத்த இருப்பதாக தொழிற்சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. சிஐடியு, ஏஐடியுசி மற்றும் எச்எம்எஸ் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரசு தொழிலாளர்களின் வேலை நேரம் குறித்து கொண்டு வந்த மசோதாவை உடனடியாக முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி மே 12 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் முழுமையாக வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்றும் அன்றைய தினமே தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்திற்கு முன்னதாக 27 ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து நோட்டீஸ் வழங்கவும் முடிவு செய்துள்ளனர். மேலும், மே 12 ஆம் தேதி பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்காது எனவும் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT