ADVERTISEMENT

குமரியில் மெரினா புரட்சி..? 3000 போலீசார் குவிப்பு..!

11:35 PM Apr 06, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT

" வாடி வாசலை திறக்காமல் வீட்டு வாசலுக்குப் போக மாட்டோம்." என அலங்காநல்லூரில் ஆரம்பித்து சென்னை மெரினாவில் மிகப்பெரிய அளவில் புரட்சியை நடத்தி சாதித்துக்காட்டினர் மாணவர்கள். நீட் தேர்வு, கன்னியாகுமரி மீனவர் பிரச்சனை வரிசையில் தற்பொழுது காவிரி மேலாண்மை வாரியம் என ஆளும் அரசிற்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெறாத நாட்களே தமிழகத்தில் இல்லை. இதே வேளையில், கன்னியாகுமரி சரக்குப் பெட்டகத் துறைமுகத் திட்டத்திற்கு எதிராக ஏப்ரல் 7, 2018 அன்று ஒரு மாவட்டம் தழுவிய மாபெரும் கவன ஈர்ப்புப் போராட்டத்துக்கு போராட்டக் குழு ஏற்பாடு செய்திருந்தது. அதற்காக முறையான காவல்துறை அனுமதியும் வாங்கியிருந்த வேளையில், அதே தினத்தில் பா.ஜ.க.வினர் ஏப்ரல் 7 அன்று குமரி மாவட்டத்தில் முழு அடைப்பு நடத்துவோம் என்று போட்டி அறிவிப்பு செய்திருந்தனர்.



இவ்வேளையில், கூடங்குளம் அனுமின் உலை எதிர்ப்பாளரும், பச்சைத் தமிழகத்தின் நிறுவனருமான சுப.உதயகுமாரன், "அணையப்போகும் விளக்கு அடர்த்தியாக எரியும்.!" என்ற தலைப்பினில், " கன்னியாகுமரி சரக்குப் பெட்டகத் துறைமுகத் திட்டத்திற்கு எதிராக ஏப்ரல் 7, 2018 அன்று ஒரு மாவட்டம் தழுவிய மாபெரும் கவன ஈர்ப்புப் போராட்டத்துக்கு போராட்டக் குழு ஏற்பாடு செய்திருந்தது. முறையான காவல்துறை அனுமதியும் வாங்கியிருந்தார்கள். ஆனால், திடீரென ஏப்ரல் 5 அன்று பா.ஜ.க.வினர் ஏப்ரல் 7 அன்று குமரி மாவட்டத்தில் முழு அடைப்பு நடத்துவோம் என்று அறிவித்தனர். காவல்துறையிடம் அனுமதி வாங்காமல், உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தாமல் எப்படி மாவட்டம் தழுவிய முழு அடைப்பு நடத்துவோம் என்று அறிவிக்க முடியும்? அப்படியானால் ஏற்கனவே அனுமதி வாங்கியவர்கள் பைத்தியக்காரர்களா? யாரும் எதுவும் கேட்க முடியாது. பாசிசம் இப்படித்தான் வேலை செய்யும், செய்கிறது.

சரக்குப் பெட்டகத் துறைமுக எதிர்ப்புப் போராட்டம் தொடர்பான சுவரொட்டிகளை வாகனங்களில் வந்து பா.ஜ.க., மற்றும் ஆர்.எஸ்.எஸ். நபர்கள் கிழித்தெறிந்தனர். போராட்டக்காரர்கள் மக்களை அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்திருந்த வாகன ஓட்டிகளை தனித்தனியாக சந்தித்து மிரட்டியிருக்கின்றனர். "பந்த் நடத்தப் போகிறோம், உன் வாகனம் ஓடினால் அடித்து உடைப்போம்" என்று மிரட்டியிருக்கிறார்கள். இரண்டாவதாக போராட்டம் அறிவித்த பாசிஸ்டுகளை தடுப்பதற்கு பதிலாக, காவல்துறை நேற்று (ஏப்ரல் 5) நள்ளிரவு சரக்குப் பெட்டகத் துறைமுக எதிர்ப்புப் போராட்டத்துக்கு அளித்த அனுமதியை நீக்கியிருக்கிறது. சில பாசிச ஆதரவு ஊடகங்களோ இரண்டாவதாக அறிவிக்கப்பட்ட போராட்டச் செய்தியை முதல் பக்கத்தில் வெளியிட்டு தங்கள் அரச விசுவாசத்தைக் காட்டிக்கொண்டு அலைகின்றன. நேற்று (ஏப்ரல் 5) மாலை ஒரு தோழர் என்னை தொலைபேசியில் அழைத்து ஏப்ரல் 7 அன்று பெரும் பிரச்சினைகள் செய்வதற்கு திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள், குறிப்பாக நீங்கள் கவனமாக இருங்கள் என்று எச்சரித்தார். இன்று (ஏப்ரல் 6) மாலை பச்சைத் தமிழகம் கட்சி சார்பாக ஆரல்வாய்மொழியில் திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு நீங்கள் போக வேண்டாம் என்று சில அதிகாரிகள் என்னை தடுத்திருக்கின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் காவி பாசிசம் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது. பா.ஜ.க. கட்சிக்காரர்கள் வீடு வீடாகச் சென்று தனிநபர்கள் பற்றி அவதூறு பேசி வருகிறார்கள். நாகர்கோவில் நகர்மன்ற முன்னாள் தலைவி(தி) ஒன்று பல வீடுகளுக்குச் சென்று என்னைப் பற்றி அவதூறு பேசிக்கொண்டிருக்கிறது. இந்த "பாதாளச் சாக்கடை புகழ்" தலைவி(தி)யை சாலையில் போகும் மக்கள் எல்லாம் சாபமிடுவதை கேட்க காது கோடி வேண்டும். பொது வெளியில் மேடைபோட்டு அரசியல் பிரச்சினைகள் குறித்து, "வளர்ச்சித் திட்டங்கள்" பற்றி விவாதிப்பதற்கு இந்த தலைவி(தி)யும், இதன் பொன்னான எஜமானரும் அணியமாக இருக்கிறார்களா? பேசுவோமா? இவர்கள் எல்லாம் கூட்டாகவும், கூட்டம் கூட்டமாகவும், தனியாகவும் கர்நாடகாவில், பெங்களூருவில் வாங்கிக் குவித்திருக்கும் சொத்துக்கள் பற்றி, குமரி மாவட்டத்திலும், சுற்றுவட்டாரத்திலும் நடத்திக் கொண்டிருக்கும் குவாரிகள் பற்றியும் பேசுவோமா? நள்ளிரவில் கள்ளர்கள் போல நடத்தும் ரகசியப் பயணங்கள் பற்றிப் பேசுவோமா?

கன்னியாகுமரி சரக்குப் பெட்டகத் துறைமுகத் திட்டம் இவர்களுக்குக் கிடைத்திருக்கும் பொன் முட்டையிடும் வாத்து. குமரி மாவட்டம் அழிந்தால் என்ன, சுற்றுச்சூழல் சிதைந்தால் என்ன, யார் எக்கேடு கெட்டுப் போனால் என்ன, எங்களுக்கு வேண்டியது பொன் முட்டை என்று அலைகிறது இந்தக் கூட்டம். அறிவார்ந்த கருத்துக்கள், சிந்தனைகள் அறியாத, புரியாத இந்த தலைவி(தி)கள், அவர்களின் பொன்னான எஜமானர்கள் பொய் சொல்லி, புரளி பேசி, மிரட்டி சாதித்துவிடலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள். இந்த யோக்கிய சிகாமணிகள் உதயகுமார் வெளிநாட்டு கைக்கூலி, தேசத்துரோகி என்று கொக்கரித்துக் கொண்டிருக்கின்றனர், பேதலித்துத் திரிகின்றனர், பேட்டிக் கொடுக்கின்றனர்.

மோசடி ஆட்சி நடந்துகொண்டிருப்பதால் (இன்னும்) ஆறுமாத கால அதிகாரத்தோடு தலைகால் புரியாமல் ஆடுகிறார்கள். இவர்களின் அரசியல் அஸ்தமனம் வெகு அருகாமையில் இருக்கிறது. அணையப்போகும் விளக்கு இப்படித்தான் அடர்த்தியாக எரியும். பாரதி சொன்னது போல, "கட்டுண்டோம், பொறுத்திருப்போம், காலம் மாறும்!" என தனது முக நூலில் பதிவிட்டுள்ளார். இது இப்படியிருக்க, " மீனவ மக்கள் மாணவர்களோடு ஒன்றிணைந்து குமரி கோவளக் கடற்கரையில் ஒன்றிணைந்து மெரினாப் புரட்சியினைப் போல் இங்குப் போராடப் போகின்றார்கள்" என ரெட் அலர்ட்டை ஊதிவிட்டது உளவுத்துறை.



இதனால் உஷாரடைந்த காவல்துறை நெல்லை சரக டி.ஐ.ஜி.கபில் சாரட்கர் தலைமையில், 5 எஸ்.பி.க்கள், 8 ஏ.டி.எஸ்.பி.க்கள், 7 ஏ.எஸ்.பி.க்கள், 22 டி.எஸ்.பி.க்கள் உள்ளிட்ட 3000 போலீசாரை கன்னியாகுமரியில் குவித்து வைத்துள்ளதால் அங்கு பதட்டம் நிலவி வருகின்றது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT