ADVERTISEMENT

'பூதக்கண்ணாடி வைத்து தேடிப் பார்ப்பதா? இது கைகூடாது'' - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

04:54 PM May 27, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

'தேசிய அளவிலான அமைப்புகள் தமிழ்நாட்டிற்கு வந்து குற்றம் குறைகளை பூதக்கண்ணாடி வைத்து தேடிப் பார்த்து அதை பெரிதுபடுத்தலாமா என்று நினைப்பது என்பது சரியான காரியம் அல்ல' என தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ''திருச்சி, ஸ்டான்லி மற்றும் தர்மபுரி ஆகிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் பழமைவாய்ந்த மருத்துவமனைகள். அதிலும் திருச்சி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் இன்று மிகச்சிறப்பான வகையில் மருத்துவ சேவையாற்றி வருகிறார்கள். ஆனால் தேசிய மருத்துவ ஆணையத்தினர் சிசிடிவி கேமரா இல்லை என்று சொல்லி கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்வோம் எனச் சொல்லியிருக்கிறார்கள்.

ஓரிரண்டு இடங்களில் சிசிடிவி பழுதுபட்டிருக்கும். அதை சரி செய்து கொடுத்து விடுவோம். அதற்காக மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்து என செய்திகள் வெளியிடுவது மக்கள் நல்வாழ்வு துறையின் மருத்துவ சேவைக்கு செய்கிற களங்கமாக இருக்கிறது. இந்த சின்ன குறைகளுக்காகவே ஒரு நிர்வாகம் அங்கீகாரத்தை ரத்து செய்கிறோம் என்ற பெரிய வார்த்தைகளை எல்லாம் சொல்வது மாநிலத்தின் மீது அவர்கள் காட்டுகிற பாகுபாட்டை வெட்ட வெளிச்சம் ஆக்கி இருக்கிறது.

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் மருத்துவமனைக்குச் சென்று பார்க்கும் பொழுது மருத்துவர்கள் மீது தவறில்லை; நீங்கள் முறையாக செய்து இருக்கிறீர்கள்; உங்கள் மீது எந்த குற்றமும் இல்லை என்று சொல்லிவிட்டு வெளியே வந்து ஆளுநர் கூற்றுக்கு சப்பை கட்டு கட்டுவது போல் ஆணையத்தின் நிர்வாகிகள் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள். இன்றைக்கு தேசிய மருத்துவ ஆணையம் கூட சிசிடிவி கேமரா இல்லாததற்கு மருத்துவக் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்வோம் எனச் சொல்லி இருப்பது அதிகபட்சமான ஒன்று. நிச்சயமாக நானும் துறையின் செயலாளரும் சேர்ந்து முதல்வரின் அறிவுறுத்தலை பெற்று ஒன்றிய அமைச்சர்களை சந்திக்க இருக்கிறோம்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரையும் ஆயூஷ் அமைச்சரையும் இது சம்பந்தமாக சந்தித்து எடுத்துச் சொல்ல இருக்கிறோம். தமிழ்நாட்டின் தேவைகளை எடுத்துச் சொல்வது என்பது வேறு. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கட்டமைப்புகளை குறை சொல்வது போன்ற இந்த நிகழ்வுகளை அவர்கள் தவிர்த்துக் கொள்வது நல்லது. தேர்தல் வருகிறது என்பதற்காக தேசிய அளவிலான அமைப்புகள் எல்லாம் தமிழ்நாட்டிற்கு வந்து இதுபோன்ற குற்றம் குறைகளை பூதக்கண்ணாடி வைத்து தேடிப் பார்த்து அதை பெரிதுபடுத்தலாமா என்று நினைப்பது என்பது சரியான காரியம் அல்ல. இது உங்களுக்கு கைகூடாது. இதுபோல் எந்த ஆணையத்தையும் ஒன்றிய அரசு பயன்படுத்தி மாநில அரசுக்கு எதிராக; மத்திய மாநில உறவுகளுக்கு எதிராக; மாநில அரசின் உரிமைகளுக்கு எதிராக எந்த செயல் செய்தாலும் இது அவர்களுக்கே பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கடந்த காலங்கள் உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த விஷயத்திலும் அவர்கள் சற்று பொறுமையாக இருப்பது நல்லது'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT