ADVERTISEMENT

கிரண்பேடிக்கு எதிராக சட்டப்பேரவையில் ஆவேசம்! அ.தி.மு.க - தி.மு.க மாறி மாறி வெளிநடப்பு!  

09:34 AM Jul 22, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஆளுநர் கிரண்பேடியின் எதிர்ப்பையும் மீறி ஆளுநர் உரையின்றி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பியது.

இந்த நிலையில் கடந்த வாரம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கரோனா கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளைக் கடுமையாகப் பேசியுள்ளார். அதன் காரணமாக கடந்த 2 நாட்களாகக் கரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவர்கள், ஊழியர்கள் 2 நாட்களாக கிரண்பேடியை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரம் திங்கள்கிழமை சட்டப்பேரவை நிகழ்விலும் எதிரொலித்தது.

இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை கூடிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய காங்கிரஸ், தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள், 'மக்களின் உயிரைக் காக்கக்கூடிய கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களைக் கண்ணியமாகப் பாராட்ட வேண்டிய நிலையில் அவர்களைக் கடுமையாக விமர்சித்தும், மிரட்டும் தொனியிலும் ஆளுநர் கிரண்பேடி பேசியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அவர் மீது குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பேரவையில் கண்டன தீர்மானம் இயற்ற வேண்டும் எனக் குரல் எழுப்பினர்.

இந்த விவகாரம் குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ், "தமிழ் அதிகாரிகளை ஆளுநருக்குப் பிடிக்கவில்லை. கடந்த 100 நாட்களாக ஆளுநர் மாளிகையை விட்டு வெளியே வராத கிரண்பேடி பட்ஜெட் விவகாரத்தைத் திசைதிருப்ப ஆய்வு என்ற பெயரில் கரோனா பணியில் ஈடுபட்ட மருத்துவ அதிகாரிகளை மிரட்டியது கண்டனத்திற்குரியது. புதுச்சேரியில் கரோனா அதிகரித்து வருகிறது. படுக்கைகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம். ஒரு கட்டத்தில் ஆளுநர் மாளிகையைக் கூட கரோனா வார்டாக மாற்றலாமா என்று நாங்கள் முயற்சிக்கிறோம். இதுகுறித்து அங்கு ஆய்வு செய்யவும் தயாராக இருக்கின்றோம்" என ஆவேசமாகப் பேசினார்.

இதற்குப் பதிலளித்த "முதலமைச்சர் நாராயணசாமி, உயிர்காக்கும் உன்னத பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளிடம் கன்னியமாக நடந்துகொள்ள வேண்டும், ஆனால் அந்தக் கண்ணியத்தை நான் கிரண்பேடியிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. கரோனா பேரிடர் காலத்தில் ஆளுநர் அரசுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்" என்றார்.

அதனையடுத்து ஆளுநர் மீது கண்டன தீர்மானம் எதுவும் முன்மொழியவோ, வழிமொழியவோ இல்லை. இருந்த போதிலும் இதுகுறித்து பேசிய சபாநாயகர் சிவக்கொழுந்து, "உயிரைக்காக்கும் உன்னதப் பணியில் ஈடுபடக்கூடிய மருத்துவர்களை நாம் பாராட்ட வேண்டும். அவர்கள் மனம் புண்படும் வகையில் அவமரியாதையுடன் பேசிய வார்த்தைகளை ஆளுநர் கிரண்பேடி திரும்பப் பெற வேண்டும், இல்லையெனில் வருத்தம் தெரிவிக்க வேண்டும்" எனக் கூறி பேரவையை 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதனிடையே 'புதுச்சேரியில் தமிழக முன்னாள் ஜெயலலிதாவிற்குச் சிலை வைக்கக் கோரியதற்கு நடவடிக்கையில்லை. தி.மு.கவை மகிழ்ச்சிபடுத்த ராஜீவ் பெயரிலான திட்டத்தைக் கலைஞர் பெயருக்கு மாற்றி'யதாக புகார் கூறி அ.தி.மு.க உறுப்பினர் அன்பழகன் தலைமையில் அக்கட்சி எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அதேசமயம் 'அ.தி.மு.க உறுப்பினர்கள் கலைஞரை அவமதித்து பேசியதைக் கண்டித்தும், இதனைக் கண்டிக்காத அமைச்சர்களைக் கண்டித்தும் தி.மு.க. எம்.எல்.ஏக்கள் சிவா, கீதா ஆனந்தன், வெங்கடேசன் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT