Puducherry Minister Darna against central government and Governor Kiran Bedi

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 4 பிராந்தியங்கள் உள்ளன. அதில் ஆந்திர மாநிலம் கோதாவரி அருகே புதுச்சேரி மாநிலத்தின் ஏனாம் பிராந்தியம் உள்ளது. இந்தத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் பதவி வகித்து வருபவர் மல்லாடி கிருஷ்ணாராவ்.

Advertisment

Advertisment

இந்நிலையில், ஏனாம் பிராந்தியத்தைசேர்ந்த ஒரு பெண் உட்பட 14 தொழிலாளர்கள் ஆந்திர மாநிலத்துக்கு பணிக்குச் சென்றிருந்த நிலையில் கரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலானது. இதையடுத்து ஆந்திரத்தின் பல ஊர்களில் இருந்து சொந்த ஊரான ஏனாம் பகுதிக்கு அந்த தொழிலாளர்கள் திரும்பும்போது அவர்கள் புதுச்சேரி மாநில ஏனாம் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அதையடுத்து “ஏனாம் மக்களை 24 மணி நேரத்தில் உள்ளே விடாவிட்டால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக ஏனாம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறை அமைச்சருமான மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று மதியம் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து,மத்திய கேபினட் செயலரை முதல்வர் நாராயணசாமி தொடர்பு கொண்டார். ஏனாம் வந்தோரை தனிமைப்படுத்தி அதன்பிறகு பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் செயல்படலாம் என்று தெரிவித்தார்.

அத்துடன் நேற்று (ஏப்.28) இரவு நடந்த பேரிடர் கூட்டத்தில் முடிவு செய்து அவர்களை ஏனாம் வருவதற்கு முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி ஏனாம் தொழிலாளர்கள் ஏனாம் தாவரவியல் பூங்காவுக்கு நேற்று இரவு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு படுக்கை, உணவு வசதி செய்து தரப்பட்டது. ஆனால் அந்த பூங்கா தற்போது ஆந்திரத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதே நேரத்தில், பாதுகாப்புபணியில் ஏனாம் போலீஸார்தான் உள்ளனர். அங்கு 50 ஏக்கர் பகுதிகளைபூங்காவாக மாற்றும் பணியை ஆந்திர அரசுதான் செய்கிறது. அத்துடன் அவர்களுக்கு கரோனா பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டு, அவை ஆந்திர மாநில மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இச்சூழலில் இன்று மதியம் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்துக்கு கருப்பு உடையுடன் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் வந்தார். அவர் சபாநாயகர் சிவக்கொழுந்துவை அவரது அறைக்குசென்று பார்த்து மனுவை தந்தார். பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர், "ஏனாம் மக்களை இன்னும் அனுமதிக்கவில்லை. தற்போதும் ஆந்திரத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில்தான் உள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. அத்துடன் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக உள்ளார். இது தொடர்பாக மனு தந்துள்ளேன். ஆளுநரின் செயல்பாடுகளை கண்டித்து தர்ணாவில் உள்ளேன்" என்று தெரிவித்தார்.

அதையடுத்து அவரை காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி.சுப்ரமணியம், வைத்தியலிங்கம் எம்.பி, மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் பிரமுகர்கள் சமரசம் செய்தனர். முதலமைச்சர் நாராயணசாமியும் ஏனாம் தொழிலாளர்களை தகுந்த பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைகள் செய்து வருவதாக கூறியதையடுத்து சமாதனம் அடைந்தார் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்.

அமைச்சர் ஒருவரே சட்டப்பேரவை வளாகத்தில் மத்திய அரசையும், ஆளுநர் கிரண்பேடியையும் கண்டித்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.